search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அனைவருக்கும் என கூறி தகுதியின் அடிப்படையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 என அறிவித்துள்ளது ஏன்?- தினகரன் கேள்வி
    X

    அனைவருக்கும் என கூறி தகுதியின் அடிப்படையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 என அறிவித்துள்ளது ஏன்?- தினகரன் கேள்வி

    • எடப்பாடி பழனிச்சாமி கையில் இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையில் கட்சி செல்வாக்கை இழந்து கொண்டே வரும்.
    • பொதுமக்கள் கேட்டு வருவதால் வேறு வழியின்றி பொதுமக்களை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்த தி.மு.க அரசு தற்போது தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன் என்று புரியவில்லை.

    இதேபோல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வருவது, சம வேலைக்கு சம ஊதியம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது சம்பந்தமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என பொதுமக்கள் கேட்டு வருவதால் வேறு வழியின்றி பொதுமக்களை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

    கடந்த 2017-ம் ஆண்டு ஓ .பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தியது தவறு என அவர் உணர்ந்துள்ளார்.ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துள்ளார். அதுதான் எனது கருத்தும்.

    மேற்கு மண்டலம் எங்களது கோட்டை என எடப்பாடி பழனிச்சாமி கூறிவந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.விடம் படுதோல்வி அடைந்துள்ளார். இரட்டை இலை சின்னம் இருந்தும், ஆளும் கட்சிக்கு நிகராக பொருள் செலவு செய்தும் ஏற்பட்ட படுதோல்வி அ.தி.மு.க பலவீனம் அடைந்துள்ளது என நினைக்கத் தோன்றுகிறது.

    எடப்பாடி பழனிச்சாமி கையில் இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையில் கட்சி செல்வாக்கை இழந்து கொண்டே வரும். அ.தி.மு.க பொதுச் செயலாளர், தேர்தல் தொடர்பாக வருகின்ற 24-ந் தேதி வரக்கூடிய நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை என்னால் கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×