என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் ஒரே நாள் இரவில் குடிபோதையில் கார், மோட்டார் சைக்கிள் ஓட்டிய 166 பேர் சிக்கினர்
    X

    சென்னையில் ஒரே நாள் இரவில் குடிபோதையில் கார், மோட்டார் சைக்கிள் ஓட்டிய 166 பேர் சிக்கினர்

    • அதிவேகம், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுதல், செல்போன் பேசி கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் சோதனை முக்கியமான இடங்களில் நடந்தது.

    சென்னை:

    சென்னையில் மோட்டார் வாகன விபத்தை குறைக்க போக்குவரத்து துறையுடன் இணைந்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை தடுக்க அபராத தொகை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

    கடந்த மாதம் 21-ந்தேதி முதல் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர், இணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் சிறப்பு வாகன தணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    சென்னை பெருநகரத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 50 ஆயிரம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அபராதமாக ரூ.4 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது.

    அதிவேகம், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுதல், செல்போன் பேசி கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். குறிப்பாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சோதனை முக்கியமான இடங்களில் நடந்தது.

    சென்னை நகர் முழுவதும் ஒரே நாள் இரவில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 166 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 15 பேர் மது அருந்தி காரை ஓட்டி வந்து சிக்கிக்கொண்டனர். போக்குவரத்து விதிகளை மீறிய 217 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது தவிர 683 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை சந்தித்து குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டன. 13 குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டது.

    சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    Next Story
    ×