search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவொற்றியூர்-பொன்னேரி இடையே பக்கிங்காம் கால்வாய் மேம்பால பணிகள் மீண்டும் நாளை மறுநாள் தொடங்குகிறது
    X

    திருவொற்றியூர்-பொன்னேரி இடையே பக்கிங்காம் கால்வாய் மேம்பால பணிகள் மீண்டும் நாளை மறுநாள் தொடங்குகிறது

    • சென்னை திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் இணைப்பு சாலையில் பக்கிங்காம் கால்வாய் ஓடுகிறது.
    • பாலம் கட்டினால் 6 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல தேவையில்லை.

    திருவொற்றியூர்:

    சென்னை திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் இணைப்பு சாலையில் பக்கிங்காம் கால்வாய் ஓடுகிறது.

    இந்த கால்வாயின் மேலே கடந்த 2016-ம் ஆண்டு ரூ.54 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.

    ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பாலம் கட்டுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.

    பாலம் அமைக்கும் பகுதியில் மண் தரையானது மிகவும் பலவீனமாக காணப்பட்டது. மேலும் கால்வாயை அகலப்படுத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது.

    மேலும் இந்த பகுதியில் சி.பி.சி.எல். நிறுவனத்தின் குழாய் செல்கிறது. இதனால் அடித்தள பகுதியை அமைப்பதில் தடங்கல் ஏற்பட்டது.

    இதனால் இந்த பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதை பாலப் பணிகள் நடைபெறாததால் திருவொற்றியூரில் இருந்து மணலி செல்பவர்கள் சர்வீஸ் சாலை வழியாகவே சென்றனர்.

    இதனால் அவர்கள் மணலி, பொன்னேரி ஆகிய இடங்களுக்கு செல்ல சுமார் 6 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டி இருந்தது. மேலும் பஸ்கள், வாகனங்கள் சுற்றிச் சென்று வந்ததால் சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக மாறியது.

    எனவே அந்த வழியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். அதன்பிறகு பொது மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த பாலம் கட்டினால் 6 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல தேவையில்லை.

    அரை கிலோ மீட்டர் பயணித்தால் போதும் என்பதால் பாலம் கட்டும் பணிகளை முடிக்குமாறு பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பாலம் பணிகள் நடைபெறும் பகுதியில் சி.பி.சி.எல். குழாய் செல்லும் இடத்தில் 2 கல்வெட்டுக்களை சி.பி.சி.எல். நிறுவனம் அமைக்க வேண்டும்.

    இதற்கான தொகை ரூ.2½ கோடியை சமீபத்தில் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாலம் கட்டுமான பணிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மீண்டும் தொடங்க உள்ளது. இதை விரைவில் கட்டி முடித்து வருகிற ஏப்ரல் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×