என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூரில் பலத்த மழை- வீட்டு முன்பு அறுந்து விழுந்த மின்கம்பியை எடுத்த பெண் பலி
- திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் பலத்த மழையாக பெய்தது.
- மின்சாரம் பாய்ந்ததில் நிர்மலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் பலத்த மழையாக பெய்தது. இந்த நிலையில் பலத்த மழை காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விபரம் வருமாறு:-
திருவள்ளூரை அடுத்த திருப்பந்தியூர் கன்னியம்மன் நகரை சேர்ந்தவர் நிர்மலா(வயது52). நேற்று இரவு திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதில் நிர்மலா வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் இது யாருக்கும் தெரியவில்லை. இன்று அதிகாலை எழுந்த நிர்மலா வீட்டின் முன்பு மின்கம்பி அறுந்து கிடப்பதை கண்டு அதனை எடுக்க முயன்றார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் நிர்மலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும் மப்பேடு போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பலியான நிர்மலாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் உள்ள மின்கம்பிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பழுதான மின்கம்பிகள் மாற்றப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த சாதாரண மழைக்கே மின்கம்பி அறுந்து பெண்ணின் உயிரை காவு வாங்கிவிட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணி முதல் விடிய,விடிய பலத்த மழை கொட்டியது. காஞ்சிபுரம் செவிலிமேடு, ஓரிக்கை, ஒலி முகமது பேட்டை, மூங்கில் மண்டபம் பஸ் நிலையம், அய்யம்பேட்டை, முத்தியால்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் பகுதியில் இருந்த பழமையான அரச மரம் ஒன்று மழையின் காரணமாக அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது சரிந்தது. இதில் வீடு பலத்த சேதம அடைந்தது. அதில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.






