என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராக பேசுபவர்கள் தேச விரோதிகள்- எச்.ராஜா தாக்கு
- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது தேச விரோத நடவடிக்கைகளை உறுதி செய்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை மேற்கொண்டது.
- பிரதமர் மோடியை பற்றி பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் எழுதிய மோடி-20 புத்தக்கத்தை அனைவரும் படிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி-20 புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தென்னிந்திய மாநிலங்களுக்கான மோடி-20 புத்தகம் வெளியிடும் பொறுப்பாளர் எச்.ராஜா, புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
முன்னதாக எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது தேச விரோத நடவடிக்கைகளை உறுதி செய்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை மேற்கொண்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தீய சக்திகளுக்கு துணை போவதற்கு என்றே திருமாவளவன், சீமான் போன்ற சிலர் உண்டு. இவர்கள் அரசியலில் இருக்க லாயக் கற்றவர்கள். விடுதலை சிறுத்தைகள், பி.எப்.ஐ. எஸ்.டி.பி.ஐ.க்கும் வித்தியாசம் இல்லை. எனவே, தமிழக அரசு, அரசியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகள் மீதும், திருமாவளவனுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எந்த பாதுகாப்பும் தமிழக காவல் துறை கொடுக்கக்கூடாது. திருமாவளவன், சீமானை உடனே கைது செய்ய வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு எதிராக பேசுபவர்கள், தேச விரோதிகள், பிரதமர் மோடியை பற்றி பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் எழுதிய மோடி-20 புத்தக்கத்தை அனைவரும் படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பா.ஜனதா மாநில பொது செயலாளர் மோகன் குமார், மாநில துணை தலைவர் ரவிச்சந்திரன், மாநில செயலாளர் நாகராஜ், வில்லியனூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், நிகழ்ச்சி பொறுப்பாளர் முன்னாள் நீதிபதி அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






