என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவாரூர் வ.த.க நிர்வாகி கொலையில் தேடப்பட்ட குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
- பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த வாளால் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார்.
- குற்றவாளி பிரவீன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (34).
வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளரான இவரை 8 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்தது.இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
கொலை சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் நீடாமங்கலத்தை சேர்ந்த ஸ்டாலின் பாரதி (வயது 32), வீரபாண்டியன் (29), சூர்யா (21), அரசு (20), மாதவன் (21) ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.தொடர்ந்து மீதமுள்ள கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய, திருவாரூர் அழகிரி காலனியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மனோரா அருகில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.பிரவீன் பதுங்கியிருந்த இடத்தை நெருங்கிய போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். உடனே பிரவீன் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட போலீசார் அவரை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த வாளால் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார். இருப்பினும் பிரவீனை பிடிக்க முயன்றபோது அவரை மீண்டும் தாக்கி உள்ளான்.
இதனால் தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் ராஜேஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் பிரவீன் முட்டுக்கு கீழே காலில் சுட்டார். இதில் பிரவீன் காலில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.
இதையடுத்து பிரவீன் மற்றும் அவரால் வெட்டப்பட்டு காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகிய 2 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
நள்ளிரவில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு வந்து குற்றவாளி பிரவீனிடம் விசாரணை நடத்தினார். மேலும் சிகிச்சை பெறும் சப்-இன்ஸ்பெக்டர் இளங்னோவிடமும் விசாரணை நடத்தி அவரின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து குற்றவாளி பிரவீன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் ஆஸ்பத்திரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பிடிப்பட்ட ரவுடி பிரவீன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கொலையாளிகள் 6 பேர் சிக்கி உள்ள நிலையில் மீதமுள்ளவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






