என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சனாதனத்தை வீழ்த்தும்- திருமாவளவன் பேட்டி
- வேதத்திற்கும், பூர்வீக குடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
- பிறப்பு அடிப்படையில் உயர்வு, தாழ்வை நிலைப்படுத்துவது சனாதன தர்மம்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம் பட்டியில் நடந்த கட்சி பிரமுகரின் திருமணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசின் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி மனதார பாராட்டி வரவேற்கின்றது. சாதி அடிப்படையில் மோதல்களை உருவாக்குவது சங் பரிவார் அமைப்புகள் தான்.
தமிழகத்தில் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் எழுப்பி ராமர் பெயரை சொல்லி சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்து ஆதயாயம் தேட முடியாது. எனவே அவர்களுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு சாதியின் பெயரால் வன்முறையை தூண்டுவது தான்.
சாதிப்பெருமையை பேசுவது சங்பரிவார் அமைப்புகள் தான். அம்பேத்கர், பெரியாரை பிடித்தவர்கள் சாதி அரசியலை பேச மாட்டார்கள். சட்டம், ஒழுங்கை பாதிக்கும் வகையில் பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இதேபோல் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா போன்றோர் வன்முறையை தூண்டக்கூடிய வகையில் பேசி வருகிறார்கள். எனவே இவர்கள் எல்லாம் காவல் துறை கட்டுப்படுத்த வேண்டும்.
சனாதன தர்மம் என்பது பிராமணர், ஆரியர்கள் சொல்லும் பெயர். நமது வாழ்வியல் எப்போது தோன்றியது? என யாராலும் சொல்ல முடியாது. வேதத்திற்கும், பூர்வீக குடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மனு சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பிறப்பு அடிப்படையில் உயர்வு, தாழ்வை நிலைப்படுத்துவது சனாதன தர்மம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சனாதனத்தை வீழ்த்தும்.
காலை சிற்றுண்டி திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு சங்பரிவார் அமைப்புகள் தூண்டுதலாக இருக்கும் என்ற சந்தேகம் உள்ளது. இதன் மூலம் தலித் மக்களிடமிருந்து தி.மு.க. அரசை பிரிக்க நினைக்கும் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது.
இவ்வாறு அவர் கூறினார்.






