search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பசும்பொன்னில் இன்று தேவர் ஜெயந்தி விழா யாக பூஜையுடன் தொடக்கம்

    • தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
    • தென்மண்டல ஐ.ஜி. நரேந்திர நாயர் தலைமையில் பசும்பொன்னில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா 3 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஜெயந்தி விழா இன்று தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடக்கிறது. முதல் நாள் இன்று ஆன்மிக விழாவாகவும், 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், 3-ம் நாள் ஜெயந்தி விழாவாகவும் நடைபெறும்

    ஆன்மிக விழாவை முன்னிட்டு இன்று பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடம் மற்றும் அவரது சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் முன்னிலையில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் கணபதி யாக பூஜைகள் நடந்தது. பின்னர் அங்குள்ள பால முருகன், தேவர் திருமகனார் கோவிலுக்கு வருடாபிஷேகம் நடந்தது. இன்று மாலை 1008 திருவிளக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

    தேவர் நினைவிட வளாகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை இன்று மாலை கலெக்டர் திறந்து வைக்கிறார்.

    நாளை (29-ந்தேதி) நடைபெறும் அரசியல் விழாவில் அரசியல் சொற்பொழிவுகள் நடைபெறும். மேலும் பெண்கள் உள்பட ஏராளமானோர் பால்குடம் மற்றும் முளைப்பாரி, வேல் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    முக்கிய நிகழ்ச்சியான தேவர் ஜெயந்தி விழா வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அன்றயை நாளில் அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் மத்திய அமைச்சர்கள், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், சசிகலா மற்றும் முக்கிய அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தென்மண்டல ஐ.ஜி. நரேந்திர நாயர் தலைமையில் பசும்பொன்னில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. ராமநாதாபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×