என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    செங்கல்பட்டில் மாமனாரை வெட்டி கொன்ற மருமகன்
    X

    செங்கல்பட்டில் மாமனாரை வெட்டி கொன்ற மருமகன்

    • செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் துலுக்காணம்.
    • கைதான டார்ஜன் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் துலுக்காணம் (வயது50). இவரது மனைவி சம்பூர்ணம் (50). இவர்களது மகள் ஜெயந்தி (25).

    அதே ஊரைச் சேர்ந்த டார்ஜன் (35) என்பவருக்கும், ஜெயந்திக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

    நேற்று இரவு டார்ஜன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இரவு 11 மணியளவில் அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது மாமனார் துலுக்காணம், டார்ஜனை தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த டார்ஜன் மாமனாரை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு பல இடங்களில் வெட்டு விழுந்தது. உடனே மாமியார் சம்பூர்ணம் தடுக்க வந்தார். அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த துலுக்காணம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சம்பூர்ணம் படுகாயம் அடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி டார்ஜனை கைது செய்தார்.

    கைதான டார்ஜன் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 2 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தார். கஞ்சா மற்றும் மதுபாட்டில்களை கடத்தி விற்பனை செய்து வந்தார்.

    Next Story
    ×