என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதுவை மீனவ கிராமங்களில் பதட்டம்- பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    கோப்பு படம்

    புதுவை மீனவ கிராமங்களில் பதட்டம்- பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • புதுவையில் மீனவ கிராமங்களுக்கு இடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரச்சினையும் ஏற்பட்டது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுருக்குவலையுடன் துறைமுகம் வந்த படகை, சில மீனவர்கள் விரட்டியதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் காலாப்பட்டு, வீராம்பட்டினம், வம்பாகீரப்பாளையம், வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், பிள்ளை சாவடி, சோலை நகர், பனித்திட்டு, நரம்பை உள்ளிட்ட 18 மீனவ கிராமங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 250-க்கும் மேற்பட்ட படகுகளும், அங்கீகரிக்கப்படாத 38-கண்ணா படகு என்ற சுருக்குவலை பயன்படுத்தும் படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.

    சுருக்கு வலைகளை பயன்படுத்துவதால் மீன் இனங்கள் அழியும் அபாயம் உள்ளதால் சுருக்கு வலயை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்து உள்ளது. ஆனால் இந்த தடை உத்தரவு புதுவையில் தீவிரமாக நடைமுறைப் படுத்தவில்லை.

    இதன் காரணமாக புதுவை மற்றும் அருகில் உள்ள கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்கு வலையை பயன்படுத்தி புதுவை கடல் பகுதியில் மீன்களை பிடித்து வருகின்றனர். இதனால் புதுவையில் மீனவ கிராமங்களுக்கு இடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரச்சினையும் ஏற்பட்டது.

    இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுருக்குவலையுடன் துறைமுகம் வந்த படகை, சில மீனவர்கள் விரட்டியதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    இதனையடுத்து வீராம்பட்டினம் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்து சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் சுருக்கு வலையுடன் புதுவை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் யாரும் நுழையக் கூடாது அப்படி மீறி நுழைந்தால் அவர்களது படகுகளையும், வலைகளையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனைதொடர்ந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு கடந்த 3 நாட்களாக போலீசார் மீனவ கிராமங்களிலும், துறைமுக வளாகத்திலும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கலெக்டருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சுருக்கு வலையுடன் சில மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளதாகவும், அவர்கள் எப்படி தங்களது வலைகளை அங்கேயே விட்டுவிட்டு வர முடியும்.

    எனவே அவர்கள் சுருக்கு வலையுடன் துறைமுகம் வர அனுமதித்து, சுருக்கு வலைகளை பயன்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என சுருக்கு மடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கு மற்ற மீனவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதனிடையே, சுருக்கு மடி வலைகளுடன் கடலுக்கு சென்ற மீனவர்களில் சிலர் இன்று கரை திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மீனவ கிராமங்களில் பதட்டம் உருவானது. இதனையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.

    ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரெட்டி கடலோர பாதுகாப்பு படை போலீசார் ஆகியோர் தேங்காய்திட்டில் இருந்து மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்றனர். அவர்கள் கடலில் மீனவர்களுக்குள் தகராறு ஏற்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

    இதனிடையே துறைமுக பகுதியில் ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் இன்ஸ்பெக்டர் முருகன், மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கலெக்டர் தலைமையில் மீண்டும் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    Next Story
    ×