search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முக்கிய ரெயில் நிலையங்களில் கியூஆர்கோடு யு.பி.ஐ. செயலி மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் வசதி
    X

    முக்கிய ரெயில் நிலையங்களில் 'கியூஆர்கோடு' 'யு.பி.ஐ. செயலி' மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் வசதி

    • சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன.
    • நீண்ட வரிசையில் காத்து நிற்பது, பெரும்பாலான ரெயில் நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சென்னை:

    நவீன தகவல் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக அனைத்து தொழில் சார்ந்த நடவடிக்கைகளும் வங்கியின் மூலமே பணபரிமாற்றம் செய்யப்படுகிறது.

    கையில் ரொக்கமாக செலுத்துவதற்கு பதிலாக 'கூகுள் பே', 'போன் பே' போன்றவற்றின் வழியாக பண பரிமாற்ற செயலி (யு.பி.ஐ.) மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

    ஓட்டல், டீ கடை, சிறிய பெட்டி கடைகளுக்கு கூட தற்போது யு.பி.ஐ.யை பயன்படுத்தி பணத்தை புழங்குவது அதிகரித்து வருகிறது.

    முன்பதிவு டிக்கெட் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி எடுப்பதுபோல முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை யு.பி.ஐ. மூலம் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. தற்போது ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

    'ஸ்மார்ட் கார்டு' மூலம் ரீ சார்ஜ் வசதியுடன் இந்த வசதி பயணிகளுக்கு அளிக்கப்படுகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் யு.பி.ஐ. செயலி மூலம் டிக்கெட் பெறுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

    சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன.

    நீண்ட வரிசையில் காத்து நிற்பது, பெரும்பாலான ரெயில் நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் பயணிகளுக்கு யு.பி.ஐ. செயலி மூலம் எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட் எடுக்க முடியும் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    பயணிகள் தங்களிடம் உள்ள ஸ்மார்ட் போன் மூலம் யு.பி.ஐ. செயலி வழியாக டிக்கெட் பெற முடியும். தெற்கு ரெயில்வே 6 கோட்டங்களில் 254 தானியங்கி டிக்கெட் எந்திரங்களில் இந்த வசதியை மேம்படுத்துகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    தானியங்கி டிக்கெட் வாங்கும் எந்திரத்தில் உள்ள திரையில் பயணி எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என தேர்வு செய்த பிறகு அதற்கான கட்டணத்தை யு.பி.ஐ. செயலி அல்லது கியூ.ஆர்.கோடு மூலம் எளிதாக செலுத்தலாம்.

    இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதும் ஸ்மார்ட் கார்டையும் பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தலாம். புறநகர் மின்சார ரெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரெயில்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய இந்த வசதியை பயன்படுத்தலாம்.

    மொத்தம் உள்ள 254 எந்திரங்களில் சென்னை டிவிசனில் மட்டும் 96 எந்திரங்களில் இந்த வசதி மேம்படுத்தப்படுகிறது. திருச்சியில் 12, மதுரை-46, சேலம்-12, திருவனந்தபுரம்-50, பாலக்கோடு டிவிசனில் 38 என அமைக்கப்படுகிறது.

    டிக்கெட் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரிண்ட் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×