search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது- முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு

    • தமிழகம் முழுவதும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
    • கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் போல ஆயுதங்களுடன் ஊடுருவிய கடலோர காவல்படையினரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    சென்னை:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பயங்கரவாதிகள் கடல் வழியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு கடலோர பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    மாநில அரசுகள் தங்களது எல்லைகளுக்குட்பட்ட கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக 6 மாதங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது. 2 நாட்கள் தொடர்ச்சியாக இந்த ஒத்திகையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த வீரர்கள் கடல் வழியாக பயங்கரவாதிகள் போல வேடமிட்டு ஊடுருவுவார்கள். இவர்களை உள்ளூர் போலீசார் மடக்கி பிடிக்க வேண்டும் என்பதுதான் பாதுகாப்பு ஒத்திகையின் முக்கிய உத்தரவாகும்.

    இதன்படி இன்று தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் போல ஆயுதங்களுடன் ஊடுருவிய கடலோர காவல்படையினரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    சென்னையில் காசிமேடு, ராயபுரம் துறைமுகம் உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை பரபரப்பாக நடத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதே போன்று கடலோர பகுதிகளை எட்டியுள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முற்பட்டால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றியும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    இதனையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுமார் 1 லட்சம் போலீசார் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளின் மேற்பார்வையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மேற்பார்வையில் நடத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்திகையை கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் கண்காணித்தனர். செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தலைமையில் மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகையையொட்டி போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஒத்திகையை நடத்தினர்.

    நாளையும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீசாரை உஷார்படுத்தி உள்ளார்.

    இந்த பாதுகாப்பு ஒத்திகையின் போது கவனக்குறைவாக செயல்படும் போலீசாரிடம் விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×