search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கி நாளை வரை நடக்கிறது
    X

    கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கி நாளை வரை நடக்கிறது

    • இறுதி நாளான நாளை பிரமாண்ட ஒத்திகையை நடத்த கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    • ஒத்திகை சென்னையையொட்டிய கடலோர பகுதியில் நாளை நடைபெறுகிறது.

    சென்னை:

    கடல் வழியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் இன்றுபாது காப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடலோர பாதுகாப்பு படையினர், இந்திய கடற்படையினர், உள்ளூர் போலீசார் ஆகியோர் இணைந்து 'சீ விஜில்' என்ற பெயரில் ஒத்திகையை மேற்கொண்டனர்.

    தமிழக காவல்துறையினர் கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் மேற்பார்வையில் அனைத்து மாவட்டங்களில் இன்று காலை இந்த ஒத்திகை மற்றும் பயிற்சி தொடங்கப்பட்டது.

    கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் இந்த ஒத்திகை ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வருகிறது.

    கடல் வழியாக ஊடுருவி முக்கிய இடங்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்றும், அதனை முறியடிப்பது போன்றும் இன்றைய ஒத்திகையின் போது பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன

    2 நாட்கள் இந்த ஒத்திகை நடைபெறும் என்று கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். 5 ஆயிரம் கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் இன்றைய ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய கப்பல் படையினரும் ஒத்திகையில் இணைந்துள்ளனர். ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் ஆகியவையும் கடல் பகுதியில் ரோந்து சுற்றி வந்தன. சென்னை முதல் குமரி வரை அனைத்து கடலோர மாவட்டங்களிலும் உள்ள மீனவ கிராமங்கள் பாதுகாப்பு ஒத்திகை காரணமாக பரபரப்பாக காட்சி அளித்தது.

    இறுதி நாளான நாளை பிரமாண்ட ஒத்திகையை நடத்த கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த ஒத்திகை சென்னையையொட்டிய கடலோர பகுதியில் நாளை நடைபெறுகிறது.

    முதல் நாளான இன்று சென்னை கடலோர பகுதியில் அனைத்திலும் விரிவான பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பெசன்ட் நகர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும், மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளிலும் கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து போலீசார் ஒத்திகை மற்றும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    மாறுவேடத்தில் இருக்கும் போலீஸ்காரர் ஒருவர் பயங்கரவாதி போன்று செயல்பட்டு டம்மி வெடிண்டு போன்ற பொருளை எடுத்து வருவது போன்றும், அதனை போலீசார் மடக்கி பிடிப்பது போன்றும் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    பட்டினப்பாக்கத்தில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை மணல் பகுதியில் டிராக்டரில் ரோந்து சென்று போலீசார் கண்காணித்தனர்.

    இந்த கண்காணிப்பு மற்றும் ஒத்திகையால் மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டன. காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் துணை கமிஷனர் பாலகிருஷ்ண ரெட்டி, உதவி கமிஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் பிராங்ளின் ஆகியோர் ரோந்து சுற்றி வந்து கண்காணித்தனர்.

    மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. மாமல்லபுரம் கடற்கரை கோவில் வழியாக பயங்கரவாதிகள் வேடத்தில் ஊடுருபவர்களை பிடிக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. கல்பாக்கம் அணு உலை பகுதியிலும் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    பொன்னேரி மற்றும் பழவேற்காடு சுற்று வட்டார பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட கடலோர பகுதி முழுவதையும் போலீசார் தங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா்.

    ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இந்திய கடற்படையினர் கப்பல் மற்றும் ரோந்து படகுகளில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலோர பாதுகாப்பு போலீசார் 2 அதி நவீன ரோந்து படகு மூலம் இன்று காலை 8 மணி முதல் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையில் குமரி மாவட்டத்தில் உள்ள 72 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு போலீசார் மாறுவேடத்தில் புகுந்துள்ளனர். கடலோரத்தில் வாழும் மீனவர்களுக்கு சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×