search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை, நீலகிரியில் 41 பள்ளிகளுக்கு நோட்டீசு- பள்ளி கல்வித்துறை நடவடிக்கை
    X

    கோவை, நீலகிரியில் 41 பள்ளிகளுக்கு நோட்டீசு- பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

    • தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்படும் என தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.
    • நீலகிரி மாவட்டத்தில் 10 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை.

    கோவை:

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழப்பு தொடர்பாக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு பள்ளி சூறையாடப்பட்டது.

    இதை கண்டித்து தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்படும் என தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது, உத்தரவை மீறி விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த உத்தரவை மீறி தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் நேற்று விடுமுறை அறிவித்து மூடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் கொண்ட குழுவினர் மூடப்பட்டிருந்த தனியார் பள்ளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., மெட்ரிக், பிரைமரி என மொத்தம் 31 தனியார் பள்ளிகள் நேற்று விடுமுறை அறிவித்து இருந்தது தெரியவந்தது. இதேபோல நீலகிரி மாவட்டத்தில் 10 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை.

    கோவை, நீலகிரி மாவட்டத்தில் விடுமுறை அறிவித்து இருந்த 41 பள்ளிகளுக்கும் அரசு உத்தரவை மீறி பள்ளிகளை மூடியது ஏன் என்பது பற்றி விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறுகையில் மாவட்டம் முழுவதும் நேற்று 31 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை என தெரியவந்துள்ளது. அந்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும் என்றார். இதேபோல நீலகிரி மாவட்டத்தில் விடுமுறை அறிவித்த 10 பள்ளிகளுக்கு நோட்டீசு அனுப்பப்படும் என முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தமிழ்நாடு நர்சரி மெட்ரிக் பள்ளி சங்க நிர்வாகிகள் நீலகிரி மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் தமிழகத்தில் இயங்கும் நர்சரி மெடரிக் பள்ளிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். சின்னசேலம் பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    Next Story
    ×