search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாணவி சத்திய பிரியா கொலை வழக்கு- போலீசாரின் அடுத்தகட்ட நடவடிக்கை
    X

    மாணவி சத்திய பிரியா கொலை வழக்கு- போலீசாரின் அடுத்தகட்ட நடவடிக்கை

    • மாணவி சத்தியபிரியா கொலை வழக்கு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • மாணவி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள சதீசுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சத்தியபிரியா (வயது23). போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். அதே குடியிருப்பில் வசித்து வந்த சதீஷ் (23) என்பவர் சத்திய பிரியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். அவரது காதலை சத்திய பிரியா ஏற்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் கடந்த 13-ந்தேதி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் மாணவி சத்தியபிரியாவை மின்சார ரெயில் முன்பு தள்ளி கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக வாலிபர் சதீசை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது முதல்கட்ட விசாரணையை கடந்த 15-ந்தேதி தொடங்கினார்கள். பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட போலீசார் ரெயில் நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    ரெயில் என்ஜின் டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் ரெயில் நிலையம், அதை சுற்றி உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.

    இதன் அடுத்தக்கட்டமாக மாணவி சத்திய பிரியாவின் தோழிகள், குடும்பத்தினர், சம்பவத்தை நேரில் பார்த்து பேட்டி அளித்தவர்கள் ஆகியோர்களின் விவரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் மாணவி சத்தியபிரியாவின் தாயாரான போலீஸ் ஏட்டு ராமலட்சுமி, அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், சதீசின் குடும்பத்தினர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    மாணவி சத்தியபிரியா கொலை வழக்கு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மாணவி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள சதீசுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் சதீஷ் மீதான குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

    இதற்காக சிறையில் உள்ள சதீசை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

    தீபாவளி முடிந்த பிறகு இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது. போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்ததும் இந்த வழக்கு விசாரணை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×