search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம், திருச்செங்கோட்டில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    கோப்புப்படம்

    சேலம், திருச்செங்கோட்டில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை முன்னிட்டு சேலம் மாநகர துணை கமிஷனர்கள் தலைமையில் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சேலத்தில் இன்று ஆர்.எஸ்.எஸ். சார்பில் மாலை 4 மணியளவில் ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலம் மரவனேரி மாதவம் வளாகத்தில் இருந்து நடக்கிறது. இந்த ஊர்வலம் அம்பேத்கார் சிலை வழியாக சங்கர் நகர், தமிழ்சங்கம் சாலை வழியாக மீண்டும் மரவனேரி மாதவம் வளாகத்திற்கு வந்து அடைகிறது.

    பின்னர் மரவனேரி பிரதான சாலையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். மாநில செயற்குழு உறுப்பினர் விவேகானந்தன் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் செந்தில்குமார் செய்து வருகிறார்.

    ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை முன்னிட்டு சேலம் மாநகர துணை கமிஷனர்கள் மதிவாணன், பிருந்தா ஆகியோர் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இதே போல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி பஸ் நிலையம், சேலம் சாலை சந்திப்பு, பாவடி வீதி, கிழக்கு ரதவீதி சந்திப்பு, பூக்கடை சந்திப்பு, ஆறுமுகசாமி கோவில், வன்னியர் தெரு, திருச்செங்கோடு நகர காவல் நிலையம், வேலூர் சாலை, சங்ககிரி சாலை வழியாக 2.8 கி.மீ. தூரம் வந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைகிறது.

    இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆர்.எஸ்.எஸ். பேரணியை முன்னிட்டு 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    Next Story
    ×