search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் இன்று 53 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்: சீருடையில் அணிவகுக்கிறார்கள்
    X

    தமிழகம் முழுவதும் இன்று 53 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்: சீருடையில் அணிவகுக்கிறார்கள்

    • அனைத்து இடங்களிலும் மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் ஊர்வலம் தொடங்குகிறது.
    • ஊர்வலம் புறப்படும் இடங்களில் இருந்து குறைந்தபட்சம் 3 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கினார்கள். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் 53 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. இதில் வட தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வாழப்பாடி, நாமக்கல், ஈரோடு, கோபி, கள்ளக்குறிச்சி, திண்டிவனம், கடலூர், சென்னை உள்பட 31 இடங்களில் நடக்கிறது.

    தென் தமிழ்நாட்டில் கருங்கல் தக்கலை, செங்கோட்டை, திசையன்விளை உடன்குடி, கோவில்பட்டி, ராஜபாளையம், மதுரை மேலூர், கம்பம், கொடைக்கானல், மதுரை, பரமக்குடி, காரைக்குடி, அறந்தாங்கி, திருமயம், நாகப்பட்டினம், மன்னார்குடி, பேராவூரணி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம், துறையூர், திருச்சி, கரூர், மடத்துக்குளம், திருப்பூர், கோத்தகிரி, எருமாடு, கோவில்பாளையம் ஆகிய 22 இடங்களில் நடக்கிறது.

    சென்னையில் கொரட்டூரில் உள்ள டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் காலேஜ், மணலி, குரோம்பேட்டை விவேகானந்தா பள்ளி ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. அனைத்து இடங்களிலும் மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலத்தின் முன்பு ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் படம் எடுத்துச் செல்லப்படும். அதையடுத்து பேன்ட் வாத்திய இசையும் அதன் பிறகு தொண்டர்கள் சீருடையுடன் அணிவகுப்பார்கள்.

    அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஏற்ப பேன்ட் இசைக்கும். ஊர்வலம் புறப்படும் இடங்களில் இருந்து குறைந்தபட்சம் 3 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும். ஊர்வலம் நிறைவடைந்ததும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    சேலத்தில் இன்று மாலை 4 மணியளவில் ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலம் மரவனேரி மாதவம் வளாகத்தில் இருந்து நடக்கிறது. இந்த ஊர்வலம் அம்பேத்கார் சிலை வழியாக சங்கர் நகர், தமிழ்சங்கம் சாலை வழியாக மீண்டும் மரவனேரி மாதவம் வளாகத்திற்கு வந்து அடைகிறது.

    பின்னர் மரவனேரி பிரதான சாலையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி பஸ்நிலையம், சேலம் சாலை சந்திப்பு, பாவடி வீதி, கிழக்கு ரதவீதி சந்திப்பு, பூக்கடை சந்திப்பு, ஆறுமுகசாமி கோவில், வன்னியர் தெரு, திருச்செங்கோடு நகர காவல் நிலையம், வேலூர் சாலை, சங்ககிரி சாலை வழியாக 2.8 கி.மீ. தூரம் வந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைகிறது. அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.

    Next Story
    ×