search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்ப்புதல்வன் திட்டம்: ஏழை மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும்- மாணவர்கள் பேட்டி
    X

    தமிழ்ப்புதல்வன் திட்டம்: ஏழை மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும்- மாணவர்கள் பேட்டி

    • கல்லூரியில் சேரும் அரசு பள்ளி படித்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
    • திட்டத்தின் மூலம் அந்த மாணவர்களும் கல்லூரிக்கு வரும் நிலையை உருவாக்கி உள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவிகளும் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி மாதந்தோறும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கி அவர்களின் வாழ்விலும், கல்வியிலும் ஒளியேற்றியுள்ளது.

    அதேபோன்று தற்போது அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்க கூடிய தமிழ்ப்புதல்வன் என்ற திட்டத்தை நடப்பாண்டு முதல் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய மாணவர்களை சாதனையார்களாக உருவாக்கவும், அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கவும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    இந்த திட்டத்திற்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

    மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து கல்லூரி மாணவர்கள் சிலர் கூறிய கருத்துக்கள் வருமாறு:-

    கோவை அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு அரசியல் அறிவியல் படித்து வரும் மாணவர் முகிலன் கூறியதாவது:-

    தமிழக பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த திட்டமானது கல்லூரி படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் திட்டமாகும்.


    இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயின்று வரும் ஏழை மாணவர்கள் மிகவும் பயன் அடைவார்கள். கல்லூரியில் சேரும் அரசு பள்ளி படித்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்கள் உள்பட தங்களது தேவைகளை தாங்களே நிறைவேற்றி கொள்ளவும் இந்த திட்டமானது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அரசு கலைக்கல்லூரியில் அரசியல் அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் பரத் கூறியதாவது:-

    தமிழக அரசு ஏற்கனவே புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் படித்து கல்லூரி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதுபோன்று தற்போது அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள தமிழ்ப்புதல்வன் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தின் உயர் கல்வி படிக்க கூடிய அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


    சில ஏழை மாணவர்கள் தங்கள் குடும்ப வறுமை காரணமாக கல்லூரி செல்ல முடியாமல் வேலைக்கு செல்வதும் ஆங்காங்கே இருக்க தான் செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் அந்த மாணவர்களும் கல்லூரிக்கு வரும் நிலையை உருவாக்கி உள்ளனர். இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    எம்.சி 3-ம் ஆண்டு படிக்கும் சக்திவேல் கூறியதாவது:

    இந்த திட்டமானது கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் நல்லது. ஆரம்பத்திலேயே பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவித்த போது, அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி.

    ஏழை மாணவர்கள் பலரும் இந்த திட்டம் மூலம் பயன் அடைவார்கள். வழக்கம் போல மாதந்தோறும் ரூ.1000 கொடுத்து வந்தால் மாணவர்களும் நமக்கு அரசு உதவி செய்கிறது படிக்க வேண்டும் என்று நினைத்து படிப்பில் கவனம் செலுத்துவார்கள். இது அவர்கள் படிப்பு செலவுக்கும் உதவிகரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு கல்லூரியில் எம்.சி. 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் சிவக்குமார், வினோத் கூறுகையில், இந்த திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. இது மாணவர்களின் படிப்புக்கு உதவியாக இருக்கும். இந்த திட்டம் மூலம் மாணவர்கள் பெற்றோருக்கு எந்தவித இடையூறும் கொடுக்காமல் தங்களுக்கு தேவையான படிப்பு உதவிகளை அவர்களே செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தை கொண்டு வந்ததற்கு தமிழக அரசுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    Next Story
    ×