search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடி கருக்கா வினோத்: எப்.ஐ.ஆரில் வெளியான பரபரப்பு தகவல்கள்
    X

    பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடி "கருக்கா" வினோத்: எப்.ஐ.ஆரில் வெளியான பரபரப்பு தகவல்கள்

    • கருக்கா வினோத்தை பிடிக்க சென்ற போலீசார் மீதும் கருக்கா வினோத் இன்னொரு பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசினார்.
    • கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பெட்ரோல் குண்டுகள் விழுந்து வெடிக்கவில்லை என்பது போன்றே தகவல்கள் பரவி வந்தன.

    சென்னை:

    சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் போது நடந்தது என்ன? என்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கிண்டி போலீஸ் நிலையத்தில் கருக்கா வினோத் மீது போடப்பட்டு உள்ள எப்.ஐ.ஆரில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-

    கவர்னர் மாளிகையில் பிரதான நுழைவு வாயிலான எண்.1-ல் போலீசார் பணியில் இருந்த போது, கருக்கா வினோத் என்பவர் எதிரில் உள்ள நடைபாதையில் இருந்து 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் (பெட்ரோல் குண்டு) தீப்பற்ற வைத்து வீசினார். முதல் பாட்டில் நுழைவு வாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த தடுப்பு (பேரி கார்டு) அருகே வந்து விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது.

    அப்போது கருக்கா வினோத்தை பிடிக்க சென்ற போலீசார் மீதும் கருக்கா வினோத் இன்னொரு பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசினார். அது அருகில் உள்ள பூந்தோட்ட தடுப்பு சுவர் மீது விழுந்தது. அப்போது போலீசாரை பார்த்து என்னை பிடிக்க வந்தீர்கள் என்றால் உங்க மேலேயும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசி விடுவேன் என்று கருக்கா வினோத் மிரட்டல் விடுத்தார்.

    இவ்வாறு எப்.ஐ.ஆரில் பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    கிண்டி கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பெட்ரோல் குண்டுகள் விழுந்து வெடிக்கவில்லை என்பது போன்றே தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை பார்க்கும் போது கவர்னர் மாளிகை அருகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலேயே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

    இதற்கிடையே கவர்னர் இந்த சம்பவம் தொடர்பாக 124 ஐ.பி.சி. (கவர்னர் மீது தாக்குதல்) சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றி போலீசாரிடம் கேட்டபோது அதுபற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசிதது முடிவு எடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×