search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பருப்பு- எண்ணெய் விலையை தொடர்ந்து சாப்பாட்டு அரிசி விலையும் கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்தது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பருப்பு- எண்ணெய் விலையை தொடர்ந்து சாப்பாட்டு அரிசி விலையும் கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்தது

    • மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதித்து இருப்பதால் அடுத்த மாதம் முதல் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
    • விலை உயர்வுக்கு அரிசி உற்பத்தி குறைந்தது மற்றும் வடமாநிலங்களில் பெய்து வரும் மழை காரணம் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மளிகை பொருட்கள், காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    சமையலுக்கு பயன்படுத்தப்படக்கூடிய பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட எல்லா பொருட்களும் விலை உயர்ந்து விட்டதால் சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விலை இன்னும் குறையவில்லை.

    இதனால் மக்கள் காய்கறிகள் பயன்பாட்டை குறைத்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மளிகை பொருட்கள் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறினாலும் விலை உயர்த்தப்பட்ட பின்னர் எந்த பொருட்களின் விலையையும் மீண்டும் வியாபாரிகள் குறைப்பது இல்லை.

    தற்போது அரிசி விலையும் கடுமையாக கூடியுள்ளது. நமது அன்றாட உணவில் அரிசியின் பங்கு இன்றியமையாதது. காலை உணவாக இட்லி, தோசையும் மதியம் சாப்பாடு வகையிலும் அரிசியை அதிகளவில் பயன்படுத்துகிறோம்.

    கடந்த மாதத்தில் இருந்தே அரிசி விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த மாதத்தில் மேலும் உயர்ந்து 25 கிலோ சாப்பாட்டு அரிசி மூட்டை ரூ.200 வரை கூடியுள்ளது. சில்லரையில் கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

    தரமான சாப்பாட்டு அரிசி வகைகள் 25 கிலோ மூட்டை கடந்த மாதத்தில் ரூ.1,400 ஆக இருந்தது. அவை தற்போது ரூ.1,600 ஆகவும், 2-வது ரக சாப்பாட்டு அரிசி ரூ.1,200-ல் இருந்து ரூ.1,400 ஆகவும் அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கூடியுள்ளது.

    இதே போல இட்லி அரிசியும் 25 கிலோ மூட்டை ரூ.850-ல் இருந்து ரூ.950 ஆக உயர்ந்துள்ளது. அரிசி மொத்த வியாபாரிகள் கூறும்போது, "கடந்த மாதத்தில் இருந்து விலை உயரத் தொடங்கியது. இந்த மாதத்தில் மட்டும் 20 கிலோ மூட்டைக்கு ரூ.80 கூடியுள்ளது. ரூ.820-க்கு விற்கப்பட்ட இட்லி அரிசி தற்போது ரூ.900-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல சாப்பாட்டு அரிசி (சிவாஜி, 5 ஸ்டார்) போன்றவை ரூ.1,400-ல் இருந்து ரூ.1,480 ஆக அதிகரித்துள்ளது. சில்லரையில் ரூ.1,600 ஆக விற்கப்படுகிறது.

    இந்த விலை உயர்வுக்கு அரிசி உற்பத்தி குறைந்தது மற்றும் வட மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணம் என்று தெரிவிக்கின்றனர்.

    எல்லா ரக அரிசி விலையும் கூடியுள்ளதால் கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. ஆந்திரா பொன்னி அரிசி கிலோ ரூ.38-ல் இருந்து ரூ.55 ஆக அதிகரித்து உள்ளது. இதே போல் இட்லி அரிசியும் கிலோவுக்கு ரூ.4 வரை உயர்ந்துள்ளது.

    அரிசி விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட வரவு-செலவில் துண்டு விழுந்துள்ளது. அன்றாட கூலி தொழிலாளர்கள், மாதச் சம்பளம் வாங்குவோரின் வருவாயில் மளிகை பொருட்களின் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதித்து இருப்பதால் அடுத்த மாதம் முதல் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×