என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வெம்பாக்கம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
    X

    வெம்பாக்கம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

    • கல்குவாரி அமைத்தால் இங்கு உள்ள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.
    • கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த வயலூரில் உள்ள மலையில் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த வயலூர் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம்-ஆற்காடு சாலையில் வயலூர் கூட்ரோட்டில் இன்று காலை 8 மணி அளவில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் பகுதியில் கல்குவாரி அமைத்தால் இங்கு உள்ள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். பாறைகள் வெடிவைத்து தகர்க்கும் போது அருகில் உள்ள வீடுகள் சேதம் அடையும். வெடித்து சிதறும் பாறைகளால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    கல்குவாரி அமைத்தால் கனரக வாகனங்கள் வேகமாக சென்று வரும் அதனால் புழுதி ஏற்பட்டு எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் எனக்கூறி மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன், தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோனியா மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சமாதானத்தை ஏற்காத அப்பகுதி மக்கள் கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதாக வருவாய்த் துறையினர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் எனக் கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    காலை 8 மணியில் இருந்து தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரு பக்கமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் நடுவழியில் தவித்தனர்.

    கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×