என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு: ஈரோட்டில் இன்று 2-வது நாளாக பொதுமக்கள்-வியாபாரிகள் சாலை மறியல்
    X

    சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு: ஈரோட்டில் இன்று 2-வது நாளாக பொதுமக்கள்-வியாபாரிகள் சாலை மறியல்

    • பணியை விரைந்து முடிக்க இப்பகுதி மக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தனர்.
    • சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த கம்பிகளை இழுத்து நடுரோட்டில் போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு-சத்தி ரோட்டில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.

    ஈரோட்டில் இருந்து கோபி, சத்தியமங்கலம் செல்லும் முக்கிய சாலையாக இருப்பதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. சாலை விரிவாக்க பணிகள் காரணமாக இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்து வந்தனர்.

    பணியை விரைந்து முடிக்க இப்பகுதி மக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தனர். தற்போது சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் பிரிவு அருகே சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க பணிகள் நடந்து வந்தது.

    இதற்கு அப்பகுதி மக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தற்போது அந்த பகுதியில் சாலை நடவே தடுப்பு சுவர் அமைக்கும் வகையில் கம்பிகள் கட்டப்பட்டு இருந்தன.

    இதனையடுத்து நேற்று மதியம் 12 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சாலை நடுவில் தடுப்பு சுவர் அமைத்தால் 1½ கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி வரும். இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

    இதனையடுத்து வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து போக செய்தார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்நிலையில் இன்று மீண்டும் சாலை நடுவில் தடுப்பு சுவர் அமைக்கும் வகையில் கம்பிகளுக்கு கான்கிரீட் கலவை போடும் பணி நடப்பதாக அப்பகுதி மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் தகவல் கிடைத்தது.

    இந்நிலையில் இன்று மதியம் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாரதி தியேட்டர் பிரிவு அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் 2-வது நாளாக ஈடுபட்டனர்.

    சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த கம்பிகளை இழுத்து நடுரோட்டில் போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் ஈரோட்டில் இருந்து கோபி, சத்தியமங்கலம் செல்லும் பஸ்கள், சத்தியமங்கலம், கோபிலிருந்து ஈரோட்டுக்கு வரும் வாகனங்கள் சாலையின் இரு புறம் நீண்ட வரிசையில் அணி வகுத்துனின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் தாசில்தார் பாலசுப்பிரமணியம், வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் உடனடியாக சாலை மறியல் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறினர்.

    இதனை ஏற்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர். ரோட்டில் போட்டிருந்த கம்பிகளை எடுத்து சாலை யோரமாக போட்டனர்.

    இதனால் 30 நிமிடம் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

    Next Story
    ×