search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு: கைதான ரவுடி பின்னணியில் யார்-யாருக்கு தொடர்பு?
    X

    கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு: கைதான ரவுடி பின்னணியில் யார்-யாருக்கு தொடர்பு?

    • கருக்கா வினோத்தின் பின்னணி பற்றி அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

    சென்னை:

    கிண்டி கவர்னர் மாளிகை வாசல் முன்பு ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவரது பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    ரவுடி கருக்கா வினோத் கடந்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டை வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் அவர் சிறையில் இருந்து வெளியில் வந்து உள்ளார்.

    இதன் பிறகுதான் கவர்னர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசி கைதாகி இருக்கிறார். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு கருக்கா வினோத் கடந்த 3 நாட்களில் எங்கெங்கு சென்றார்? யாரையெல்லாம் சந்தித்தார்? என்பது போன்ற தகவல்களை திரட்டி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக கவர்னர் மாளிகை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு கருக்கா வினோத் மட்டுமே வந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இருப்பினும் கருக்கா வினோத் கடந்த 3 நாட்களில் எந்தெந்த பகுதிக்கு சென்று உள்ளார் என்பது பற்றி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கருக்கா வினோத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களையும் தண்டிக்க வேண்டும் என்று கவர்னர் மாளிகை தரப்பில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதே கருத்தை பாரதிய ஜனதா கட்சியினரும் கூறி வருகிறார்கள். கருக்கா வினோத் மட்டுமே கவர்னர் மாளிகை வாசலில் நடந்த பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை இதுதொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூறியுள்ளனர்.

    இப்படி கவர்னர் மாளிகை மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கூறி இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

    அதில் கருக்கா வினோத் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன? என்பதை பட்டியலிட்டு உள்ளார். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதிலும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக தொடர்ந்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன்படியே கருக்கா வினோத்தின் பின்னணி பற்றி அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கருக்கா வினோத் மட்டுமே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டாரா? வேறு யாரும் அவருக்கு உதவி செய்துள்ளனரா? இதில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.

    கருக்கா வினோத் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாக ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளன. இது 4-வது வழக்காகும்.

    கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

    ஆனால் அந்த போராட்டங்கள் எல்லாம் அமைதியாக நடந்து முடிந்துள்ள நிலையில் கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசி கைதானவுடன் அளித்த வாக்குமூலத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் கவர்னர் நடந்து கொள்வது பிடிக்காத காரணத்தாலேயே பெட்ரோல் குண்டை வீசியதாக தெரிவித்து உள்ளார்.

    இது அவராக அளித்த வாக்குமூலம் தானா? திட்டமிட்டு பெட்ரோல் குண்டுகளை வீச செய்துவிட்டு அதுபோன்று வாக்குமூலம் அளிப்பதற்கு யாரும் தூண்டுதலாக இருந்தார்களா? என்பது பற்றிய சந்தேகமும் உள்ளது. இதனை தெளிவுப்படுத்தும் வகையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×