search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடலூர் அருகே இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: பதட்டம்- போலீஸ் குவிப்பு
    X

    கடலூர் அருகே இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: பதட்டம்- போலீஸ் குவிப்பு

    • ராமதாஸ் அந்த பகுதியில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சிகளில் முக்கிய பொறுப்பாளராக பங்கேற்பது வழக்கம்.
    • கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது திடீரென பிரச்சினை ஏற்பட்டது.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் சீனு என்கிற ராமதாஸ் (வயது 52). இந்து முன்னணி நிர்வாகியான இவர் அந்த பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அறங்காவலராக உள்ளார்.

    நேற்று இரவு வெளியே சென்று விட்டு தனது மகேந்திரா ஜீப்பினை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். அதன் பின்னர் வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை மர்மநபர்கள் அங்கு வந்தனர்.

    அக்கம் பக்கம் பார்த்த மர்மநபர்கள் திடீரென ராமதாஸ் வீட்டின் மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர். அது தீப்பிளம்பாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த இடமே புகைமண்டலமாக காட்சி அளித்தது. சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிய ராமதாஸ் திடுக்கிட்டு வெளியே வந்தார்.

    அப்போது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த தனது ஜீப் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தண்ணீர் ஊற்றி அணைத்தார்.

    இதில் ஜீப்பின் டயர் எரிந்து நாசமானது. உடனே அக்கம் பக்கம் சுற்றி பார்த்தபோது 2 பெட்ரோல் குண்டுகள் கிடந்தது. வீட்டின் அருகே உள்ள பனை மரத்தின் மீதும் பெட்ரோல் குண்டுகள் கிடந்தது.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீப்போல பரவியது. இதனால் ஏராளமான இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ், பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    பெட்ரோல் குண்டின் துகள்களை போலீசார் சேகரித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்து முன்னணி நிர்வாகி ராமதாஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது யார்? எதற்காக வீசினர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

    ராமதாஸ் அந்த பகுதியில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சிகளில் முக்கிய பொறுப்பாளராக பங்கேற்பது வழக்கம். கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது திடீரென பிரச்சினை ஏற்பட்டது.

    அப்போது ராமதாஸ் இதில் தலையிட்டு அந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார். இதன் எதிரொலியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்து முடிந்த 2 நாளில் ராமதாஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இது குறித்து ராமதாஸ் கூறுகையில் கடந்த மாதம் ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. நான் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தேன். ஆனால், போலீசார் வழக்கு எதுவும் பதியவில்லை. தற்போது 2 முறையாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை மர்மநபர்கள் வீசி வருகிறார்கள். இதன் எதிரொலியாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டது.

    மேலும் இந்து முன்னணி நிர்வாகி வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில் பி.முட்லூரை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி ராமதாஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×