என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரியபாளையம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா?
- குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து பயன்பாட்டுக்கு வரவில்லை.
- பெரியபாளையம் பஸ் நிலையத்தில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 4 ஆண்டுகளாக பயனபாடு இன்றி உள்ளது.
பெரியபாளையம் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தினந்தோறும் சுமார் 2 ஆயிரத்துக்கும்மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து ஊத்துக்கோட்டை, பொன்னேரி, திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பஸ் இங்கு வந்து செல்கின்றன. மேலும் புகழ்பெற்ற பவானி அம்மன் கோவிலும் உள்ளது. இதன்காரணமாக பெரியபாளையம் பஸ்நிலையத்துக்கு பயணிகள் வருகை எப்போதும் இருக்கும்.
இந்த நிலையில் பயணிகளின் குடிநீர் தேவையை தீர்க்கும் வகையில் கடந்த 2018-2019-ம் ஆண்டு எம்.எல்.ஏ. தொகுதி மேம்மபாட்டு திட்டத்தில் பெரியபாளையம் பஸ் நிலையத்தில் ரூ.6.5 லட்சம் செலவில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பயணிகளுக்க குறைந்த வலையில் தரமான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது.
ஆனால் இதுவரை இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து பயன்பாட்டுக்கு வரவில்லை. காட்சி பொருளாக இங்கு உள்ளது. இதன் மேல் தற்போது போஸ்டர்கள் ஒட்டப்பட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட இடமே தெரியாத அளவுக்கு காட்சி அளிக்கிறது.
மேலும் தற்போது ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 14 வார ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
எனவே இந்த நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர். 4 ஆண்டுகளாக காட்சி பொருளாக இருக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறைந்த விலையில் தரமான குடிநீர் தாகத்தை போக்க கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்க்ள கூறும்போது, பெரியபாளையம் பஸ் நிலையத்தில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 4 ஆண்டுகளாக பயனபாடு இன்றி உள்ளது. ஆடித்திருவிழா தொடங்கி உள்ள நிலையில் இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்ட வரவேண்டும் என்றனர்.






