search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது
    X

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது

    • களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது.
    • மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அணைகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 400 கன அடியில் இருந்து 1108 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து 99.10 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வருவதால் இன்று மாலைக்குள் 100 அடியை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 113.45 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 67.50 அடியாக உள்ளது. அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 54 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 46 மில்லி மீட்டரும், சேர்வலாரில் 23 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. அங்கு 62 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தனர்.

    அதே நேரத்தில் ஓரமாக நின்று பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 84 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அம்பையில் 55 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அணைகளின் மேற்படிப்பு பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.

    அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 105.50 அடியாக உள்ளது. அந்த அணைப்பகுதியில் 31 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36.10 அடியே எட்டி ஒரு மாதத்திற்கும் மேலாக நிரம்பி வழிகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. நாற்று பாவுதல், தொழி அடித்தல், நடவு செய்தல் உள்ளிட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

    Next Story
    ×