search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆபரேஷன் கந்துவட்டி 2.0 சோதனை: கோவையில் ஒரே நாளில் 18 பேர் அதிரடி கைது
    X

    ஆபரேஷன் கந்துவட்டி 2.0 சோதனை: கோவையில் ஒரே நாளில் 18 பேர் அதிரடி கைது

    • கருமத்தம்பட்டி சாரதாம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்த மருந்து கடை உரிமையாளரான இளங்கோவன் பொள்ளாச்சியை சேர்ந்த பஷீர் என்பவருக்கு 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
    • பணத்தை திருப்பி செலுத்திய பிறகும், அசலுக்கு மேல் வட்டி, அதிக தொகை கேட்டார்.

    கோவை:

    தமிழகம் முழுவதும் கந்துவட்டி வசூலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார்.

    இதைதொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி.முத்துசாமி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மேற்பார்வையில் 6 டி.எஸ்.பிக்கள், 17 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 17 தனிப்படையினர் ஆபரேஷன் கந்துவட்டி 2.0 திட்டத்தின் கீழ் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

    கே.ஜி.சாவடி, மதுக்கரை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, சூலூர் உள்பட மாவட்டம் முழுவதும் 41 இடங்களில் சோதனை நடந்தது.

    காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது 11 மணி வரை நடைபெற்றது. இதில் கந்து வட்டிக்காக பலரிடம் எழுதி வாங்கி வைத்து இருந்த சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கே.ஜி.சாவடியில் தொழில் அதிபர் நடராஜன் வீட்டில் இருந்து ரூ.1கோடியே 10 லட்சம் மற்றும் சொத்து பத்திரங்கள், புரோ நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கவுண்டம்பாளையம் ராமசாமி நகர் தேமையன் வீதியை சேர்ந்த செல்வி(42) என்பவர் கந்து வட்டி வசூலித்ததாக வந்த தகவலின் பேரில் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கிருந்து சொத்து ஆவணங்கள், ஏ.டி.எம்.கார்டுகள், ரூ.2லட்சத்து 70 ஆயிரமும் பறிமுதல் செய்தனர்.

    கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணகுமார்(45) என்பவர் திருப்பூரை சேர்ந்த மோகன் குமார் என்பவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து விட்டு அதற்கு அசலுக்கு மேல் கூடுதல் வட்டி வசூலித்துள்ளார்.

    அதேபோல கருமத்தம்பட்டி சாரதாம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்த மருந்து கடை உரிமையாளரான இளங்கோவன் (52), பொள்ளாச்சியை சேர்ந்த பஷீர் என்பவருக்கு 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பணத்தை திருப்பி செலுத்திய பிறகும், அசலுக்கு மேல் வட்டி, அதிக தொகை கேட்டார்.

    இதையடுத்து போலீசார் சரவணகுமார் மற்றும் மருந்து கடை உரிமையாளர் இளங்கோவன் மீது கந்துவட்டிக் கொடுமை மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் கந்துவட்டி வசூலித்தவர்களிடம் இருந்து மொத்தம் 379 சொத்து பத்திரங்கள், 3 பாஸ்போர்ட்டுகள், 127 காசோலை புத்தகங்கள், 48 ஏ.டி.எம். கார்டுகள், 18 வங்கி கணக்கு புத்தகங்கள், 54 கையெழுத்திட்ட வங்கி பத்திரங்கள், 211 வாகன ஆர்.சி.புத்தகங்கள், 35 பைனான்ஸ் புத்தகங்கள், 7 ஆதார் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் 1 கோடியே 26 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கந்து வட்டி வசூலித்ததாக மாவட்டம் முழுவதும் செல்வி, நடராஜன், வேலுச்சாமி, பட்டை சவுந்தரராஜன், உதயகுமார், இளங்கோ, சரவணன், சுபாஷ், பார் நாகராஜ் என்ற முத்துசாமி, மகேந்திரன், திருசிற்றம்பலம் குமார், சதீஷ்குமார், மாணிக்கம், ராமர், மாடசாமி, செல்வராஜ், ஜனார்த்தனன், ரமேஷ் மணியன் என்ற கிருஷ்ணசாமி ஆகிய 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதில் வேலுச்சாமி என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை தவிர மற்ற 18 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×