search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சத்துணவு ஊழியர்களின் 4 நாட்கள் பட்டினி போராட்டம் தொடங்கியது
    X

    சத்துணவு ஊழியர்களின் 4 நாட்கள் பட்டினி போராட்டம் தொடங்கியது

    • 72 மணிநேரம் பட்டினியாக இருந்து எங்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதே போராட்டத்தின் நோக்கம்.
    • அரசு எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 72 மணிநேர பட்டினி போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கியது.

    காலமுறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும். 52 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புதல், சத்துணவு மையங்கள் மூலம் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது. இன்று முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் உணவு உட்கொள்ளாமல் தண்ணீர் மட்டுமே குடித்து போராட்டத்தை கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர்.

    போராட்டத்துக்கு மாநில தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மலர்விழி, மாநில துணைத் தலைவர்கள் பேயத் தேவன், பெரியசாமி, அண்ணாதுரை, தமிழரசன், மஞ்சுளா, வாசுகி, ஜெயந்தி, மாநில செயலாளர்கள் கற்பகம், சுமதி, மகேஸ்வரி, பாண்டிச்செல்வி, லதா, நிர்மலா ஜெஸி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய தொழிற்சங்க மைய பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் வாசுகி, சுகந்தி சீனிவாசன், சரவணத்தமிழன், சாம்ராஜ், ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள். அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு கலந்துகொண்டு பேசுகிறார். போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து மலர்விழி கூறியதாவது:-

    காலை முறை ஊதியம், ஓய்வூதியம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினி போராட்டத்தை தொடங்கி உள்ளோம். தேர்தல் கால வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த போராட்டத்தால் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சமையலர்கள், உதவியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 72 மணிநேரம் பட்டினியாக இருந்து எங்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதே இந்த போராட்டத்தின் நோக்கம். அரசு எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×