search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வட சென்னை அடையாளம் மாறுகிறது- அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிய திட்டங்கள்
    X

    வட சென்னை அடையாளம் மாறுகிறது- அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிய திட்டங்கள்

    • சென்னை நகரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • வடசென்னையில் ஆங்கிலேயர் காலத்தில் விட்டுச் சென்ற முக்கியமான அடையாளங்கள் உள்ளன.

    தென் இந்தியாவின் வாசல் எனப்படும் சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க பகுதி வடசென்னை.

    வடசென்னை பாரம்பரியச் சிறப்பு மிக்கது. அகில இந்தியாவிலும் முதல் நவீன நகரம் உருவானது வடசென்னையில் தான். இது உருவானது 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி. அன்றுதான் விஜயநகர சாம்ராஜ்யத்திடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி, இப்போதைய வட சென்னையில் மதராசபட்டினம் எனும் கிராமத்தை விலைக்கு வாங்கியது.

    இந்த நாள் சென்னை நகரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உருவாக்கத்தில் பங்காற்றிய பாரி, பின்னி, ஆர்பத்நாட் முதலான பெயர்கள் வடசென்னையின் வாழ்வோடு இணைந்தவை. சென்னையின் பல பாரம்பரியக் கட்டிடங்கள் வடசென்னையில்தான் உருவாயின. புனித ஜார்ஜ் கோட்டை, உயர் நீதிமன்றம், ஆண்டர்சன் தேவாலயம், ஒய்.எம்.சி.ஏ, மெட்ராஸ் வங்கி (இப்போது இந்திய ஸ்டேட் வங்கி), அஞ்சலகம் முதலான கட்டிடங்கள் வடசென்னையின் பழம் பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

    வடசென்னையில் ஆங்கிலேயர் காலத்தில் விட்டுச் சென்ற முக்கியமான அடையாளங்கள் உள்ளன. இங்குள்ள கல்மண்டபம் மார்க்கெட் 1818-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. வடசென்னை எல்லா பிரிவுகளையும் சார்ந்த இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லா மக்களும் வாழும் இடமாகும். எனினும் இந்த பகுதி மற்ற இடங்களை காட்டிலும் பிந்தங்கி இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது அந்த நிலை விரைவில் மாறப்போகிறது.

    சென்னையில் மத்திய சென்னை, தென் சென்னை பகுதி அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்கள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இந்த பகுதியை போல வட சென்னை பகுதியை உருவாக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக 'வட சென்னை வளர்ச்சி திட்டம்'என்ற புதிய திட்டத்தை உருவாக்கி அத்திட்டத்துக்காக ரூ.1000 கோடி 3 ஆண்டுகளில் செலவிடப்படும் என தமிழக அரசு அறிவித்து அதற்கான ஆயத்த பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது.

    வடசென்னையை மொத்தமாக உருமாற்றும் விதமாக பணிகள் தொடங்க உள்ளன. அங்கே அடிப்படை வசதிகள் தொடங்கி அல்டிமேட் வசதிகள் வரை பலவற்றை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வட சென்னையின் அடையாளமே மாற உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், பெரம்பூர், செம்பியம், மதுரவாயல், கொரட்டூர், அய்னாவரம், மாதவரம் மற்றும் சூரப்பேட்டை ஆகிய இடங்களில், 8 மாடிகளில் இருந்து, 35 தளங்கள் வரை வானளாவிய கட்டிடங்கள் உருவாக உள்ளன. இவை அனைத்தும் குடியிருப்பு வளாகங்களாக இருக்கும். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் பல மாடிக் கட்டிடக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 18 உயர்நிலை கட்டிடங்களில் இவையும் அரசு அனுமதிக்கு உள்ளன.

    வடசென்னை மேம்பாட்டுத் திட்டத்தால் இந்த பகுதியில் 35 மாடிகள் வரை கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட உள்ளது. முன்பு 10 தளங்கள்வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டி ருந்தன. பெரம்பூர், மாதவரத்தில் மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இப்பகுதியில் அதிகமானோர் வீடுகளை வாங்குகின்றனர். நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள காசிமேடு கடற்கரை மெரினாவுக்கு நிகராக நவீனப்படுத்தப்பட உள்ளது. காசிமேடு முதல் நெட்டுக்குப்பம் வரை உள்ள கடற்கரை இவ்வாறு அழகு படுத்தப்பட உள்ளது.

    வடசென்னையில் வசிப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆரோக்கியம் முதல் விளையாட்டு, போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. விளையாட்டு மைதானங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள், திருமண மண்டபங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளது. மெரினாவை போல விதவிதமான உணவுகள், குதிரை சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கும் வர இருக்கிறது. நீரூற்று நடைபாதைகள், மீன் சிலை உள்ளிட்டவையும் கொண்டுவரப்பட உள்ளது. மொத்தத்தில் வட சென்னை வளர்ந்த சென்னையாக விரைவில் மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தண்டையார்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது. இந்த நவீன விளையாட்டு வளாகத்தில் குத்துச்சண்டை, கபடி, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தனி மைதானம் அமைக்கப்படவுள்ளது.

    2 கபடி மைதானம், ஒரு சிலம்பம் மைதானம், 2 குத்துச்சண்டை மைதானங்கள், இறகுப்பந்து, கூடைப்பந்து, ஓடுதளம், ஸ்கேட்டிங், கைப்பந்து, கிரிக்கெட் பயிற்சி, ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், பெண்களுக்கான உள்ளரங்க உடற்பயிற்சிக் கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டுக் கூடம், விளையாட்டுக் கருவிகள் மற்றும் இதர உள்ளரங்க விளையாட்டுகளுக்கான வசதிகளோடு இது அமைகிறது.

    இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலைத் திட்டமான துறைமுகம்-மதுரவாயல் பறக்கும்சாலை திட்டமும் வட சென்னையில்தான் அமைய உள்ளது. பெரிய தொழில் நகரம் பெரம்பூர் அமைந்திருப்பது வட சென்னையில்தான். அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ், லோகிளாஸ் என அனைத்து தரப்பு மக்களும் கலந்து வாழும் பகுதி. மாதம் 10,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் என அனைவருக்குமான ஓரளவு பொருளாதார வசதிகள் நிறைந்த பகுதி பெரம்பூர். ஒருகாலத்தில், மூங்கில் காடுகளால் நிறைந்திருந்த பகுதியான இந்த இடம் சென்னையின் நவ நாகரீக அடையாளமாகப் பார்க்கும் அண்ணா நகர், கே.கே. நகர் ஆகிய பகுதிகளுக்கு சவால்விடும் அளவுக்கு வளர்ந்து இருந்தது. வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும், அந்த மக்களின் உணர்வுகளில் கலந்துள்ள பின்னி மில் இங்குதான் இருந்தது.

    இந்தியாவின் முதல் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் இங்குதான் உருவானது.

    பின்னி மில்லை விட பரப்பளவில் பெரிய சிம்சன் தொழில் நகரம், பெரம்பூரில் இயங்கி வருகிறது. பட்டாளம், புளியந்தோப்பு என்று பெரம்பூர் பகுதிகளை குட்டி குட்டி தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் மேம்பாடு அடையும் வகையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் வட சென்னையின் அடையாளங்கள் மாற உள்ளன.

    Next Story
    ×