search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி புதிய மின்விளக்குகள்: பெண் ரசிகைகள் பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடுகள்
    X

    சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி புதிய மின்விளக்குகள்: பெண் ரசிகைகள் பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடுகள்

    • எப்போதும் நெருக்கடியாகவே காணப்படும் பெல்ஸ்ரோடு சந்திப்பு பகுதி புதிதாக சீரமைக்கப்பட்டு பளிச்சென்று காட்சி அளிக்கிறது.
    • சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் இரவில் இருந்து போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

    சென்னை:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் முதல்முறையாக டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மதியம் 2 மணியளவில் நடைபெறும் இப்போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்பதால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி வழக்கத்தைவிட அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பாக கிரிக்கெட் போட்டியை நடத்தும் அதிகாரிகள் குழுவினருடன் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஆலோசனை நடத்தி உள்ளார்.

    இந்நிலையில், கிரிக்கெட் போட்டி பாதுகாப்பு பணிக்காக சென்னையில் முதன் முறையாக டிரோன்களைப் பயன்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை சுற்றி வானில் இரவிலும் படம் பிடிக்கும் வீடியோ உள்ள டிரோன்களைப் பறக்கவிட்டு, அதில் உள்ள கேமராவில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுதவிர, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி உள்ள அனைத்து சாலை சந்திப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் கையடக்க அதி நவீன 10 கேமராக்கள் மூலம் கிரிக்கெட் போட்டி தொடக்கம் முதல் முடியும் வரை போக்குவரத்து போலீசார் கண்காணிக்க உள்ளனர். கிரிக்கெட் போட்டியைக் காண வரும் ரசிகர்கள், அவர்களின் வாகனங்களும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட உள்ளது.

    இந்த காட்சிகள் அனைத்தையும் போலீஸ் அதிகாரிகள் தங்கள் செல்போனிலேயே பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, சென்னையில் நாளை நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டி தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

    கிரிக்கெட் மைதான வளாகத்தை சுற்றி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. தற்போது, போக்குவரத்து காவல் சார்பில் கையடக்க நவீன கேமராக்களும் தற்காலிகமாக பயன்படுத்தப்பட உள்ளன.

    மதியம் 2 மணிக்கு தொடங்கும் கிரிக்கெட் போட்டி, இரவு 10 மணி அளவிலேயே முடிவடைய வாய்ப்பு உள்ளது.

    அதன் பிறகே குடும்பத்தோடு கிரிக்கெட் பார்ப்பதற்கு வருகை தந்தவர்கள் வீடுகளுக்கு புறப்பட்டு செல்வார்கள். எப்போதுமே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு சென்னை ரசிகர்கள் குடும்பத்தோடு செல்வார்கள். குறிப்பாக பெண் ரசிகைகள் அதிக அளவில் காணப்படுவார்கள். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கிரிக்கெட் மைதானத்தை சுற்றி இருள் சூழ்ந்து காணப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இருட்டை பயன்படுத்தி திருட்டு, பாலியல் சீண்டல் போன்ற குற்றங்களில் யாரும் ஈடுபட்டு விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக இதுபோன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். எரியாத மின்விளக்குகள் பழுது பார்க்கப்பட்டிருப்பதுடன் 50 இடங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    கிரிக்கெட் போட்டியை காண வருபவர்கள் கார்-மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தும் இடத்திலும் கிரிக்கெட் போட்டியை பார்த்து முடித்து ரசிகர்கள் வீடு திரும்பும் சாலைகளை குறிவைத்து புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இதுபோன்ற முக்கிய சாலைகளில் மொத்தம் 55 புதிய கேமராக்கள் நிறுவப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும் ஸ்டேடியத்தை சுற்றியுள்ள சாலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கூட்டங்களை பயன்படுத்தி பிக்பாக்கெட் போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எப்போதும் நெருக்கடியாகவே காணப்படும் பெல்ஸ்ரோடு சந்திப்பு பகுதி புதிதாக சீரமைக்கப்பட்டு பளிச்சென்று காட்சி அளிக்கிறது. அந்த பகுதியில் நடைமேடை ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் இரவில் இருந்து போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

    Next Story
    ×