search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆக்கிரமிப்பை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்... நெல்லை மாநகராட்சி கெடு
    X

    ஆக்கிரமிப்பை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்... நெல்லை மாநகராட்சி கெடு

    • போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாநகர பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான செலவு தொகை, ஆக்கிரமிப்பு செய்ததற்கான அபராத கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த நேரிடும்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் முக்கிய சாலைகளான எஸ்.என். ஹை ரோடு, நயினார்குளம் சாலை, டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை பைபாஸ் சாலைகள், முருகன் குறிச்சி சாலை, திருவனந்தபுரம் சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் பெருக்கத்தின் காரணமாக சாலைகளில் செல்வதற்கு வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாநகர பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது.

    இதற்கு சாலைகளின் இருபுறமும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைதான் காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. எனவே சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், தள்ளுவண்டி கடைகள், விளம்பர போர்டுகள் உள்ளிட்டவற்றை அகற்றி நடைபாதைகளில் நடந்து செல்வதற்கும், சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என மாநகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகர் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறாக சாலையையும், நடைபாதையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், மேற்கூரைகள் ஆகியவற்றை 24 மணி நேரத்திற்குள் தாங்களாகவே முன்வந்து அகற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதோடு ஆக்கிரமிப்பு பொருட்கள் திரும்ப வழங்கப்படமாட்டாது.

    ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான செலவு தொகை, ஆக்கிரமிப்பு செய்ததற்கான அபராத கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த நேரிடும். மேலும் கட்டுமானம் மற்றும் கட்டிட பராமரிப்பு பணி செய்வோர் கட்டிட இடிபாடுகளையோ, கட்டுமான பொருட்களையோ பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாகவோ, கழிவுநீர் செல்லும் கால்வாய்களிலோ கொட்டி வைக்க கூடாது. அவ்வாறு கொட்டினால் அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×