என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கோடை வெப்பத்தை தணிக்க நவீன நீர் தெளிப்பான் கருவி அமைப்பு
- வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நேரங்களில், ஸ்பிரிங்ளரில் வெளியாகும் நீர் சாரலில் நனைந்தபடி புள்ளி மான்கள், கடமான்கள் உற்சாகமாக புற்களை மேய்கின்றன.
- குரங்குகள், கிளி உள்ளிட்டவற்றுக்கு வெயில் நேரத்தில் தர்பூசணி, வெள்ளிரி பழங்கள் வழங்கப்படுகின்றன.
சேலம்:
சேலம் குரும்பப்பட்டி பகுதியில் 31 ஹெக்டேரில் தமிழக அரசுக்கு சொந்தமான வன உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு புள்ளி மான், கடமான், குரங்கு, தேவாங்கு, நரி மலைப்பாம்பு, நட்சத்திர ஆமை, முதலை, நீர்ப்பறவைகள் உள்பட 24 வகையான விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை 200-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பராமரிக்கப்படுகின்றன.
சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பள்ளிக் குழந்தைகள், ஏற்காட்டுக்கு சுற்றுலா வருபவர்கள் என தினமும் ஏராளமானோர் இப்பூங்காவிற்கு வந்து செல்கின்றனர்.
இதனிடையே, கோடை காலம் தொடங்கி விட்டதல், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் வன விலங்குகளுக்கு, வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, புள்ளி மான்கள், கடமான்கள் உள்ளிட்டவை உலாவும் பகுதியில், வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் நவீன நீர் தெளிப்பான் கருவியான ஸ்பிரிங்ளர் அமைத்து நீரை நாலாபுறமும் தெளித்து வருகின்றனர்.
இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து அப்பகுதி குளிர்ச்சியாக இருப்பதுடன், மண்ணிலும் ஈரப்பதம் அதிகரித்து தரை சூடாவது தவிர்க்கப்படுகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நேரங்களில், ஸ்பிரிங்ளரில் வெளியாகும் நீர் சாரலில் நனைந்தபடி புள்ளி மான்கள், கடமான்கள் உற்சாகமாக புற்களை மேய்கின்றன.
இதேபோல் குரங்குகள், கிளி உள்ளிட்டவற்றுக்கு வெயில் நேரத்தில் தர்பூசணி, வெள்ளிரி பழங்கள் வழங்கப்படுகின்றன. மயில் உலாவும் இடத்தில், வெயில் நேரத்தில் நீர் பனித்தூவலாக பரவுவது போன்ற அமைப்பு செய்யப்பட்டு, அங்கு குளிரூட்டப்படுகிறது. எப்போதும் தரையில் ஈரப்பதம் இருக்கும்படி தொடர்ந்து வனத்துறையினர் பராமரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.






