என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குண்டும் குழியுமாக மாறிய மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
- சாலை வழியாக கனரக வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.
- இருசக்கர வாகனத்தில் செல்லவே வாகன ஓட்டிகள் அச்சப்படும் நிலை உள்ளது.
பொன்னேரி:
மீஞ்சூர் பகுதியை சுற்றி காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம், எல்.என்.டி. கப்பல் கட்டும் தளம், வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், சிமெண்ட் ஆலைகள் பெட்ரோலிய நிறுவனம், சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை, மற்றும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளன.
தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வண்டலூர்-மீஞ்சூர் சாலை மற்றும் தச்சூர்-பொன்னேரி, மீஞ்சூர் சாலையை பயன்படுத்தி வருகின்றன.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மீஞ்சூர்- திருவொற்றியூர் நெடுஞ்சாலை மிகவும் சேதமைடந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது. மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் 1 கி.மி தூரம் சாலை முழுவதும் பெயர்ந்து மரண குழிகளாக காட்சி அளிக்கின்றன. அந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. இருசக்கர வாகனத்தில் செல்லவே வாகன ஓட்டிகள் அச்சப்படும் நிலை உள்ளது.
சாலை முழுவதும் போக்கு வரத்துக்கு லாயக்கற்று பல்லாங்கு குழிகளாக காட்சி அளிக்கின்றன. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டிகளும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
குண்டும் குழியுமான சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
மீஞ்சூர்-திருவொற்றியுர் சாலை போக்குவரத்திற்கு தகுதி இல்லாத வகையில் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் தினமும் மீஞ்சூர்- வடசென்னை அனல் மின் நிலையம் சாலை, மீஞ்சூர்-மணலி சாலைகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையை சீரமைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும், மழை பெய்யும் போது வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. சாலை பள்ளத்தை தற்காலிகமாக சரி செய்யவும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் மீஞ்சூர்- திருவொற்றியூர் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






