என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மழைநீர் தேங்காமல் இருக்க தனியார் நிலத்தை கையகப்படுத்தி வாய்க்கால் அமைக்கப்படும்- அமைச்சர் தகவல்
- கீழ்க்கட்டளை ஏரிக்கு செல்லும் மழைநீர் போகும் பாதையில் தனியார் நிலம் உள்ளதால் அதை கையகப்படுத்தி வாய்க்கால் அமைத்தால் நிரந்தர தீர்வு காண முடியும் என்றார்.
- சிக்கராயபுரம் கல்குவாரியை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சென்னை:
பல்லாவரம்-குரோம்பேட்டை பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண புதிய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெரிய ஏரி, புத்தேரி, நெமிலிச்சேரி, செம்பரம் பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து மழைக்காலத்தில் வெளியேறும் உபரிநீர் பல்லாவரம் ஓம்சக்தி நகர், அருள்முருகன் நகர், நந்த வனம் நகர் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் ஒவ்வொரு மழை காலத்திலும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
அந்த பகுதிகளில் வெள்ள நீர் புகுவதை நிரந்தரமாக தடுக்கும் வகையில் வெள்ளத் தடுப்பு கால்வாய் அமைத்து கீழ்க்கட்டளை ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியை தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்திருந்தார்.
இன்று நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அப்பகுதியை நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். அவருக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி அங்கு நிலவி வரும் மழைகால பிரச்சினைகளை விரிவாக எடுத்து வறினார். கீழ்க்கட்டளை ஏரிக்கு செல்லும் மழைநீர் போகும் பாதையில் தனியார் நிலம் உள்ளதால் அதை கையகப்படுத்தி வாய்க்கால் அமைத்தால் நிரந்தர தீர்வு காண முடியும் என்றார்.
இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து வெளியேறும் மழை நீர் புத்தேரி வழியாக கீழ்க்கட்டளை ஏரிக்கு செல்ல தற்காலிகமாக அமைக்கப்பட்ட கால்வாயை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, துணை மேயர் காமராஜ், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாத் துரை, தாம்பரம் ஆணையாளர் இளங்கோவன் உடன் சென்றிருந்தனர்.
ஆய்வுக்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
பல்லாவரம்-குரோம்பேட்டை பகுதியில் உள்ள மழைநீர் கீழ்க்கட்டளை ஏரிக்கு செல்லும் வழியில் கொஞ்சம் தனியார் இடம் உள்ளது. அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தி வாய்க்கால் கட்டினால் தண்ணீர் தேங்காது.
இது 1 ஏக்கர் நிலம் எடுக்க கூடிய திட்டம். இதற்காக ரூ.35 கோடி வரை நிதி ஒதுக்கி நிலத்தை கையகப்படுத்த உள்ளோம். அதன்பிறகு வாய்க்கால் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும். 1½ வருடத்திற்குள் இதை செய்து முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் சிக்கராயபுரம் கல்குவாரியை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீரை எந்த வழியாக கொண்டு வருவது, இந்த பகுதியை மிகப்பெரிய நீர்த் தேக்கமாக எப்படி மாற்றுவது, மற்றும் தண்ணீர் வினியோகம் செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது, இங்கு 130 ஏக்கர் அரசு நிலம், 50 ஏக்கர் தனியார் நிலம் உள்ளது. சிக்கராயபுரம் கல்குவாரியை 250 ஏக்கரில் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அனுமதி பெற்று தருவோம். இங்கிருந்து குன்றத்தூர், மாங்காடு பகுதிகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக் கப்படும் என்றார்.






