search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் குவிந்த வியாபாரிகள்- விற்பனை ரூ.7 கோடியை தாண்டியது
    X

    திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் வியாபாரிகள் அதிகளவில் திரண்டிருந்ததை படத்தில் காணலாம்.

    திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் குவிந்த வியாபாரிகள்- விற்பனை ரூ.7 கோடியை தாண்டியது

    • வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • இன்று நடந்த சந்தையில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகின.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சி சந்தைக்கு அடுத்தப்படியாக பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாத புரம், சிவகங்கை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். அதிகாலையில் இருந்து காலை 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.

    இந்நிலையில் வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திருமங்கலம் ஆட்டுச்சந்தை தொடங்கியது. வழக்கத்தை விட இன்று வியாபாரிகள் அதிகளவில் திரண்டனர். இதனால் சந்தை கடுமையான கூட்டத்துடன் காணப்பட்டது.

    இதனால் ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. வழக்கமாக ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படும். ஆனால் இன்று கடும் கிராக்கி இருந்ததால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்று நடந்த சந்தையில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகின. 7 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் வளர்க்கும் ஆடுகளை தவிர்த்து இந்திய அளவில் நாட்டினம் குறும்பை கொங்கு ஆந்திரா கிடா, ராஜஸ்தான் கிடா உள்ளிட்ட கிடாக்கள் இந்த சந்தையில் பார்க்கலாம். சண்டைக்கு வளர்க்கும் குட்டிகள் இங்கு கிடைக்கும். இந்த சந்தையில் கடந்த வாரத்தை விட விலை அதிகமாக இருந்தாலும், ஆடுகளின் வரத்து அதிகமாக உள்ளது.

    மேலும் வியாபாரிகளும் அதிகளவில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர். இன்று அதிகப்படியாக 90 ஆயிரம் ரூபாய்க்கு கிடாக்கள் வந்துள்ளது. இது 60 கிலோ கறி உள்ளதாகும். ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள சண்டை செய்யும் கிடாக்கள் விற்பனைக்கு உள்ளது.

    பக்ரீத்திற்கு இதுபோல கிடாக்கள் வாங்குவதில் எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது. திருமங்கலம் சந்தையை பொறுத்தவரை திருப்தி அடைந்து தான் சென்றுள்ளனர். ஆடுகளின் விலை வழக்கத்தை விட ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாக உள்ளது. தற்போது ஆட்டுக்கறி விலை 800 ரூபாய் விற்கப்படுகிறது. ஆனால் சந்தையில் ஒரு கிலோ 1,200 ரூபாய் கறி அளவுக்கு மதிப்பு கூடுதலாக விற்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×