search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓணப்பண்டிகை தொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் குவியும் கேரளா சுற்றுலா பயணிகள்
    X

    ஓணப்பண்டிகை தொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் குவியும் கேரளா சுற்றுலா பயணிகள்

    • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    ஓணப்பண்டிகை தொடர் விடுமுறை முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான கேரளா சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதற்கிடையில் கேரளாவில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களின் கூட்டமும் கன்னியாகுமரியில் அலைமோதுகிறது. கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இதற்காக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். ஆனால் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் அங்கு வெகு நேரமாக சுற்றுலா பயணிகள் காத்து இருந்தனர். பின்னர் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர். இன்று காலை வழக்கத்தை விட அதிக அளவு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு வந்தனர். ஆனால் திருவள்ளுவர் சிலையில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் படடகில் பயணம் செய்யும் போதும் கடற்கரையில் இருந்த படியும் செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், விவேகானந்த படத்தில் உள்ள பாரத மாதாகோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சிகூடம், மீன் காட்சிசாலை, வட்டக் கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளைபீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    Next Story
    ×