search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடசென்னையில் ரூ.1000 கோடியில் வளர்ச்சி திட்டம்.. கருத்து கேட்பில் பொதுமக்கள் தெரிவித்த இரண்டு முக்கிய குறைகள்
    X

    வடசென்னையில் ரூ.1000 கோடியில் வளர்ச்சி திட்டம்.. கருத்து கேட்பில் பொதுமக்கள் தெரிவித்த இரண்டு முக்கிய குறைகள்

    • எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதியில் வசிப்பவர்கள் சுகாதார கேட்டாலும், காற்று மாசாலும் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.
    • வடசென்னை பகுதியை பொறுத்தவரை சாலை வசதி பெரும் சிக்கலாக உள்ளது.

    சென்னையில் நகரப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடைந்து இருந்தாலும், இன்னும் வட சென்னை பகுதிகளான காசிமேடு, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறவில்லை.

    திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதியில் வசிப்பவர்கள் சுகாதார கேட்டாலும், காற்று மாசாலும் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

    வடசென்னை பகுதியை பொறுத்தவரை சாலை வசதி பெரும் சிக்கலாக உள்ளது. குறுகிய சாலையில் பயணம் செய்வது சவாலானது. இதனால் போக்குவரத்தில் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது வடசென்னை பகுதி மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இங்கு போதிய அடிப்படை வசதிகளும், உள்கட்டமைப்புகளும் இல்லாத நிலை காணப்படுகிறது.

    இந்த நிலையில் வட சென்னை பகுதி மேம்பாட்டிற்காக வட சென்னை வளர்ச்சி திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு உருவாக்கி உள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.1000 கோடியை ஒதுக்கி 3 ஆண்டுகளில் செலவிடப்படும் எனதெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து வடசென்னையில் வளர்ச்சி பற்றிய திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். எனினும் வட சென்னை பகுதி மக்களிடம் நேரடியாக கருத்து கேட்பு நடத்தி அவர்கள் தங்களது பகுதியின் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறார்கள்? அவர்களது திட்டம் என்ன? என்பது பற்றி அறிய திட்டமிடப்பட்டது.

    அதன்படி கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் வட சென்னையின் வளர்ச்சி திட்டம், சமூக-பொருளாதார, உளவியல் நலன் பற்றிய கணக்கெடுக்கும் பணியை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வடசென்னையின் வளர்ச்சி தொடர்பாக கருத்து கேட்பு கணக்கெடுப்பு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டது.

    இதில் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் இருந்து 500 மாணவிகள், 22 பேராசிரியர்கள் மற்றும் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இருந்து 500 மாணவ-மாணவிகள், 42 பேராசிரியர்கள் என மொத்தம் 1000 மாணவ, மாணவிகள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், மற்றும் அண்ணாநகர் ஆகிய 7 மண்டலங்களில் 1000 மாணவ, மாணவிகள் தலா 10 பேர் வீதம் 100 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டனர். இதனை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

    மாணவ-மாணவிகள் இந்த 7 மண்டலங்களிலும் வீடு, வீடாக சென்று வடசென்னையின் வளர்ச்சி மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர். இதற்காக மொத்தம் 96 கேள்விகள் தயாரிக்கப்பட்டு இருந்தது.

    அந்த கேள்விகளை மாணவ, மாணவிகள் பொது மக்களிடம் கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டனர்.

    இந்த கேள்விகளில் பதில் அளிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களின் முழு விபரம், சொத்துக்கள், பணம் செலவினம், கடன், சமூக தொடர்பு, பழக்கவழக்கங்கள், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம், பெண்கள் நலன், வீட்டு சுகாதாரம், தனிநபர் உடல் நலம், உளவியல் சார்ந்த நலவாழ்வு, வாழும் வீடு குறித்த திருப்தி உள்ளிட்டவை முக்கியமாக இருந்தன.

    மேலும் வடசென்னை பகுதியில் வசிப்பதால் உள்ள வாய்ப்புகள் மற்றும் சாதகங்கள் என்ன? சிரமங்கள், சவால்கள் என்னென்ன? வடசென்னை மக்களின் முன்னேற்றத்திற்காக என்னென்ன வழிகளில் அரசு உதவ வேண்டும்? வாழ்க்கையில் பொதுவாக இன்னும் அடைய வேண்டிய விரும்பும் முன்னேற்றங்கள் எத்தகையது? அடைய விரும்பும் முன்னேற்றத்தை தடுப்பது எவை? என்ற முக்கிய கேள்விக்கான பதில்களை பொதுமக்கள் கூறும்போது அதனை ஒலிப்பதிவு செய்து உள்ளனர். இவை அனைத்தையும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பெற்று ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்களின் கருத்தை வைத்து வடசென்னையின் வளர்ச்சி குறித்த இறுதி திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அதனை செயல்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    இதேபோல் கருத்துகேட்பு நடைபெற்ற 7 மண்டலங்களில் உள்ள வியாபாரிகள், மகளிர் சுய உ தவிக் குழுக்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், மீனவர்கள், ஓட்டுநர்கள். தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள், சுய தொழில்புரிபவர்கள், ஏற்று மதியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் என பல்வேறு தரப்பு மக்களிடையே 13 கலந்தாய்வு கூட்டங்களும் நடைபெற உள்ளன.

    மாணவ-மாணவிகள் நடத்திய கருத்து கேட்பு கணக்கெடுப்பில் பெரும்பாலான் பொதுமக்கள் குடிநீர் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்தே கூறி உள்ளதாக தெரிகிறது. வடசென்னையை பொறுத்தவரை போக்குவரத்து பயணம் என்பது சவாலாகவே உள்ளது. இதனை சரிசெய்ய சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பெரும்பாலானோர் தெரிவித்து உள்ளனர்.

    இதேபோல் காசிமேடு பகுதி மக்கள் மீன்பிடி துறைமுக பகுதியை நவீனப்படுத்த வேண்டும் எனவும், எண்ணூர் பகுதி மக்கள் திருவொற்றியூர் விம்கோநகர் வரை உள்ள மெட்ரோ ரெயில் சேவையை 1 கி.மீட்டர் தூரம் மேலும் நீட்டித்து எண்ணூர் வரை இயக்கவேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். மணலி பகுதியில் காற்றுமாசுவை தடுக்கவும், குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதிகள் குறித்தும் கூறி இருக்கிறார்கள். காசிமேடு முதல் நெட்டுக்குப்பம் வரை கடற்கரை பகுதியை மெரினா போன்று அழகு படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வட சென்னையின் வளர்ச்சி திட்டம் தொடர்பாக நடத்தி இந்த கணக்கெடுப்பு பணியின் மூலம் அப்பகுதி மக்களின் பொருளாதார முன்னேற்றம், சமூக மாற்றங்கள் மற்றும் உளவியல் ரீதியான தேவைகளை அறிந்து கொள்ள முடியும். அவர்களுக்கு ஏற்றார் போல் திட்டங்கள் வகுக்க இது உதவியாக இருக்கும். இதனால் வடசென்னையின் தற்போதைய முகம்மாறும் என்றனர்.

    Next Story
    ×