search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடநாடு விவகாரம்: உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்- கனகராஜின் சகோதரர் தனபால் பேட்டி
    X

    கொடநாடு விவகாரம்: உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்- கனகராஜின் சகோதரர் தனபால் பேட்டி

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் என்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அதற்கு சம்மதிப்பேன்.
    • ரூ.2 ஆயிரம் கோடி வரை தருவதாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனது வீட்டுக்கு வந்து பேசினார் .

    சேலம்:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டிற்குள் நுழைந்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது.

    இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கனகராஜ் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் ஆத்தூர் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார்.

    இதற்கிடையில் கனகராஜ் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய அண்ணன் தனபால் புகார் கூறி வருகிறார். அவர் இன்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் குறித்த விபரங்களை தான் வெளியிட்டதால் தான் மனநலம் பாதிக்கப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டிடம் என் மீது புகார் அளித்துள்ளனர். மேலும் அதில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    தான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நான் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இது பற்றி மருத்துவரும் குறிப்பிடவில்லை. அதற்கான ஆதாரங்களை தர தயாரா?.

    சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தடையாக இருக்கும் என்பதால் இது போன்ற நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    நான் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் நல்ல மனநிலையோடு தெரிந்த உண்மைகளை வெளிப்படையாக சொல்லி இருக்கிறேன். தேவைப்பட்டால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் என்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அதற்கு சம்மதிப்பேன்.

    சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க தன்னிடம் பேரம் பேசப்பட்டது. ரூ.2 ஆயிரம் கோடி வரை தருவதாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனது வீட்டுக்கு வந்து பேசினார் .

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்த உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக தான் போராடி வருகிறேன். தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு கடிதம் கொடுத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×