search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவையில் இன்று மக்கள் நீதி மய்யம் மண்டல நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
    X

    கோவையில் இன்று மக்கள் நீதி மய்யம் மண்டல நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

    • கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவித்த அனைத்து கருத்துக்களையும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.
    • மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    கோவை:

    அடுத்த ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்போதே பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டன.

    அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை-அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 11 மணிக்கு கோவைக்கு வந்தார்.

    கோவை விமான நிலையத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அவர்களின் வரவேற்பை கமல்ஹாசன் ஏற்றுகொண்டார். பின்னர் அவர் காரில் அங்கிருந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.

    அங்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மேற்கு மண்டல பகுதிகளான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் நீலகிரி போன்ற பகுதிகளில் இருந்து 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி நிர்வாகிகளுடன் மேற்கு மண்டலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும். எந்தெந்த பகுதிகளில் மக்களை சந்திக்க வேண்டும்.

    மக்களிடம் என்னென்ன குறைகள் உள்ளன. எதையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பகுதியாக சென்று மண்டல நிர்வாகிகள் மக்களிடம் கலந்துரையாட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் வருவதால் மக்கள் நீதிமய்யம் கட்சி தனித்து போட்டியிடலாமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது, என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் தான் எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

    ஏற்கனவே கமல்ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்பதை கட்சியினர் ஆய்வு செய்தனர். அதன்படி தென்சென்னை, கோவை அல்லது மதுரை தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்று என கட்சி நிர்வாகிகள் கருதினர். அது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவித்த அனைத்து கருத்துக்களையும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் தீவிர பணியாற்றி கட்சிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு முடிந்ததும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் அவர் கருமத்தம்பட்டி பார்க் கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் சிறப்பாக பணிபுரியும் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கமல்ஹாசன் விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார்.

    விழா முடிந்ததும் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று. அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    Next Story
    ×