search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் 3-வது நாளாக நீடிப்பு
    X

    ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் 3-வது நாளாக நீடிப்பு

    • கடந்த சில ஆண்டுகளாக ஹாலோ பிளாக் தயாரிக்கும் மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • ஹாலோ பிளாக் கற்களின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.

    கோபி:

    தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கோபி, நம்பியூர் ஆகிய தாலுகாவில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் நிறுவனங்கள் நாள்தோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் ஹாலோ பிளாக் கற்களை உற்பத்தி செய்து ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கட்டுமான பணிக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஹாலோ பிளாக் தயாரிக்கும் மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு யூனிட் கிரஷர் மண் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.4 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஹாலோ பிளாக் கற்களின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.

    6 அங்குல அளவுள்ள ஒரு ஹாலோ பிளாக் கல் தற்போது 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக 40 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டால் மட்டுமே இழப்புகளை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    அவ்வாறு விலையை உயர்த்தினால் 3 மாவட்டங்களிலும் கட்டுமான தொழில் முழுமையாக பாதிக்கப்படும் என்பதோடு கட்டிடத்தின் மதிப்பீட்டில் கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் செலவு அதிகரிக்கும். இதனால் கட்டிட உரிமையாளர்கள் முதல் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருளாக உள்ள கிரஷர் மண், ஜல்லி, சிமெண்டு போன்றவற்றின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் கோபி, நம்பியூர் தாலுகாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் 3 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கியுள்ளனர்.

    மேலும் இவர்கள் கோபியில் லாரிகளை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹலோ பிளாக்கல் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 3-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு ஒரு கோடி மதிப்பிலான ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முடங்கிப் போய் உள்ளது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×