search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் எதிரொலி- கொடைக்கானலில் காட்டு பன்றிகளை கண்காணிக்கும் கால்நடைத்துறையினர்
    X

    ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் எதிரொலி- கொடைக்கானலில் காட்டு பன்றிகளை கண்காணிக்கும் கால்நடைத்துறையினர்

    • கொடைக்கானல் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு விலங்குகள் உள்ளன.
    • கர்நாடகா, கேரள மாநிலங்களிலும் இவ்வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு விலங்குகள் உள்ளன. குறிப்பாக யானை, காட்டு பன்றி, மான் போன்றவை மக்கள் வசிப்பிடத்துக்கு அருகே அடிக்கடி வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    அதிலும் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களை சேதப்படுத்தி செல்வதும், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை மிரட்டி வருவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பல்வேறு இடங்களில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் ஏராளமான காட்டு பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இவ்வாறு உயிரிழந்த பன்றிகளை வனத்துறையினர் தீ வைத்து எரித்து வருகின்றனர். மேலும் மற்ற விலங்குகளுக்கும் இந்த நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக எல்லைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வெளி மாவட்டங்களில் இருந்து பன்றிகளை வாகனங்களில் கொண்டு வர தடை விதித்துள்ளனர். இந்த நோய் மனிதர்களுக்கு பரவாது என்று கால்நடைத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தபோதிலும் பொதுமக்கள் அச்சத்துடனே உள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடகா, கேரள மாநிலங்களிலும் இவ்வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே கொடைக்கானலில் உள்ள காட்டுப்பன்றிகளுக்கு நோய் பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கொடைக்கானலில் காட்டுப்பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் வகை காய்ச்சல் இல்லை. அவ்வாறு இருந்தால் வனப்பகுதியில் பன்றிகள் உயிரிழந்த நிலையில் இருக்கும். அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது வரை திண்டுக்கல் மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் இல்லை. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றனர்.

    Next Story
    ×