search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெருந்துறையில் 7 சென்டிமீட்டர் பதிவு: ஈரோட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது
    X

    பெருந்துறையில் 7 சென்டிமீட்டர் பதிவு: ஈரோட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது

    • கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
    • சென்னிமலை, அம்மாபேட்டை, கொடுமுடி, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, வரட்டுப் பள்ளம், கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. குறிப்பாக காலை முதல் மாலை வரை அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்ததால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்கள் கடும் பாதிப்பு அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை மேலும் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மாலை 5 மணிக்கு பிறகு திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    பின்னர் சிறிது நேரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சோலார், நாடார் மேடு, முத்தம்பாளையம், காளைமாடு சிலை, வீரப்பன்சத்திரம் போன்ற பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    இந்த மழையால் சாலைகளில் ஆறு போல் மழை நீர் ஓடியது. நாடார் மேட்டில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்தது. முத்தம்பாளையத்தில் ஒரு பெரிய மரம் முறிந்து விழுந்தது. மழைநீர் வடிகால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓடைகளில் வெள்ளம் நிரம்பியதால் சாக்கடை கழிவுகள் சாலையில் மிதந்து சென்றன.

    இதேப்போல் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 75 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. அதாவது 7 சென்டிமீட்டர் மழை பதிவு. இதுபோல் கோபியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வாய்க்கால் ரோடு பகுதியில் மரம் முறிந்து மின் கம்பத்தில் விழுந்தது.

    இதுபோல் சென்னிமலை, அம்மாபேட்டை, கொடுமுடி, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, வரட்டுப் பள்ளம், கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருந்துறை-75, கோபி-23.20, ஈரோடு-23, சென்னிமலை-22, அம்மா பேட்டை-17.20, கொடுமுடி-10.20, மொடக்குறிச்சி-7, கவுந்தப்பாடி-7, வரட்டுப்பள்ளம்-6.40, பவானி-3.80, கொடிவேரி-3, பவானிசாகர்-1.20.

    Next Story
    ×