என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை
    X

    மழை காரணமாக பெரிய மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது


    ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

    • ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • காடையாம்பட்டி, தொட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் புழுக்கம் போன்றவற்றால் குழந்தைகள், பெரியவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 5 மணிக்கு திடீரென வானங்களில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதன் பின்னர் லேசாக மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக கோபி, கவுந்தப்பாடி, பவானி, சென்னிமலை, சத்தியமங்கலம் போன்ற பகுதியில் விடிய விடிய மழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    தரைமட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது


    ஈரோடு மாநகர பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன் பின்னரும் விடிய விடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. திடீர் மழையால் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் ரோடுகளில் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. பவானி, காலிங்கராயன்பாளையம், லட்சுமி நகர், குருப்பநாயக்கன் பாளையம், ஊராட்சி கோட்டை, காடையாம்பட்டி, தொட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    பவானி அருகே உள்ள பெரியபுலியூர் பகுதியில் இருந்து செல்லும் ஓடையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதியான பூலாம்பாளையம், ஆலங்காட்டு வலசு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்தப் பகுதியில் உள்ள சிறு பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கியது.

    அப்பகுதியில் கட்டுமான தொழிலாளர்கள் தங்கி இருந்த குடியிருப்பிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் இருந்து அவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். பவானி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்டு மேடான பகுதிக்கு அழைத்து சென்றனர்.

    பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 90 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் கோவை கோபி டவுன் பகுதியில் நேற்று மாலை 6:45 முதல் இரவு 10 மணி வரை மின்தடை ஏற்பட்டது. அதன் பின்னரும் இரவு முதல் காலை வரை அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு கொண்டே இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்பு


    சென்னிமலையில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஆப்பகூடல், அந்தியூர் பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது.

    இதேபோல் கவுந்தபாடி பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பெரியபுலியூர் பஞ்சாயத்து, மேட்டுநவிதன் பாளையம் பகுதியில் உள்ள வளையகாரர் பாளையம்குளம், பெரியபுலியூர் குளம், ராசங்காட்டு குளம், எல்லப்பாளையம் குளம் உள்ளிட்ட 5 குளங்கள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பூலபாளையத்தில் இருந்து அய்யம்பாளையம் செல்லும் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதன் காரணமாக எல்லப்பாளையம் பகுதியில் உள்ள 60 வீடுகளில் இரவு 8 மணி அளவில் மழை நீர் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ள உடைமைகள் நீரில் நனைந்தது. இது குறித்து பவானி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டில் இருந்த பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். கால்நடைகள் அனைத்தும் பத்திரமாக மீட்கப்பட்டன.

    இதேபோல் சத்தியமங்கலம், தாளவாடி போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தாளவாடியில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. இவ்வாறு மாவட்டம் முழுவதும் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    பெருந்துறை-90, சென்னிமலை-88, தாளவாடி-78, பவானி-55.80, குண்டேரிபள்ளம் அணை-51.20, கவுந்தப்பாடி-50.20, கோபி-38.20, கொடிவேரி அணை-33, ஈரோடு-22, அம்மாபேட்டை-21, மொடக்குறிச்சி-14, நம்பியூர்-13, சத்தியமங்கலம்-12, கொடுமுடி-8.20, பவானிசாகர்-5.80, வரட்டுபள்ளம்-3.60. இன்றும் ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×