என் மலர்
தமிழ்நாடு

காரல் மார்க்சை பற்றி கவர்னர் பேச்சு: சென்னையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

- கவர்னர் தன் அதிகாரத்தை கழற்றி வைத்து விட்டு பேசட்டும்.
- காரல் மார்க்ஸ் பற்றி பேச ஆர்.என்.ரவிக்கு தகுதி இல்லை.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
பொதுவுடமை தத்துவ மேதை காாரல் மார்க்ஸ் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்ததை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கவர்னர் மாளிகை அருகே சின்னமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஆர்.வேல் முருகன், செல்வா, சுந்தர் ராஜன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-
முற்போக்கு சிந்தனையாளர் காரல் மார்க்ஸ் பற்றி அரைகுறையாக புரிந்து கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். கவர்னர் தன் அதிகாரத்தை கழற்றி வைத்து விட்டு பேசட்டும். அவதூறாக பேசிய கவர்னர் வருத்தம் தெரிவிக்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
காரல் மார்க்ஸ் பற்றி பேச ஆர்.என்.ரவிக்கு தகுதி இல்லை. காரல் மார்க்ஸ் இந்தியாவில் பிறக்கவில்லை. இந்தியாவிற்கு வரவில்லை. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். பிரிட்டீஸ் ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர். காந்தி, காங்கிரஸ்காரர்களுக்கு முன்னதாகவே விடுதலை போராட்டத்திற்கு வித்திட்டவர். அவரை பற்றி கவர்னர் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கும் வரை பொதுவுடமை சிந்தனையாளர்கள், கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.