search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சூதாட்டத்தை கட்டுப்படுத்தி அரசு ஒழுங்குபடுத்தலாம்- கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பிய கடிதத்தில் தகவல்
    X

    சூதாட்டத்தை கட்டுப்படுத்தி அரசு ஒழுங்குபடுத்தலாம்- கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பிய கடிதத்தில் தகவல்

    • கவர்னர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய போது கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பி இருந்தார்.
    • கடிதத்தில் கவர்னர், தமிழக அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி சட்டசபையில் மசோதா நிறைவேற்றியது. பிறகு அது கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பல நாட்களாக இந்த மசோதா மீது கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குள் மேலும் பலர் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்தனர். எனவே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 8-ந்தேதி திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார். மேலும் இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதனை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளது. இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று முன்தினம் கூறுகையில், 'சட்டசபையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்' என்று அறிவித்தார். இதனால் தமிழக அரசியலில் ஆன்லைன் சூதாட்ட மசோதா விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது" என்று கூறினார்.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய போது கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில் அவர் தமிழக அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறி இருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்டம் என்பது, கவலை தரக்கூடிய விஷயம். அதை ஒழுங்குப்படுத்தாததால், அதற்கு அடிமையாகி, பணத்தை இழந்து, சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு ஏற்படுகிறது.

    அதேநேரம், ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்ட இணையதளம் தொடர்பான விஷயங்களை, ஒரு மாநில அரசால் மட்டும் தடை செய்ய முடியாது. இது, மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வரும் விஷயம். எனவே, தேசிய அளவில் இதற்கு நடவடிக்கை தேவை.

    எனவே சீரான முறையில் தேசிய அளவில் ஒழுங்காற்று நடவடிக்கையே இதில் அவசியமேயொழிய மாநில அரசு மட்டுமே ஒழுங்கு முறையோ சட்டத்தையோ கொண்டு வருவதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. அது நிச்சயமற்றதாகவும் இருக்கும்."

    ஒரு நபரின் திறமையைக் கொண்டு சம்பாதிப்பது அரசியலமைப்பின் 19 (1) (ஜி) பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

    அதற்கு எதிராக, எந்த அரசும் சட்டம் இயற்ற முடியாது.

    ஒரு மாநில அரசால், திறமையான விளையாட்டை ஒழுங்குப்படுத்த மட்டுமே முடியும். அதை முற்றிலும் தடை செய்ய முடியாது.

    இவ்விஷயத்தை ஏற்கனவே தெளிவுபடுத்திய பின்னும், மாநில அரசு அவசர சட்டத்தில் உள்ள அம்சங்களையே, சட்டமாக நிறைவேற்றி மீண்டும் அனுப்பி உள்ளது.

    இதைமீறி, இந்த சட்டத்தை நிறைவேற்றினால், இது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக அமையும். இதற்கு பதிலாக, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

    'இதை விளையாடுபவர்கள் தங்கள் 'ஆதார்' அட்டை, 'பான்' அட்டை போன்றவற்றை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் விளையாட முடியாது' என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி அதில் கூறி உள்ளார்.

    மசோதாவை திருப்பி அனுப்ப மூன்று விஷயங்களை வரிசைப்படுத்தி உள்ளார் கவர்னர். அது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

    முதலாவதாக இத்தகைய மசோதா, மத்திய அரசு வரம்பில் வரும் விஷயம் என்பதால் அதை மாநில அரசு நிறைவேற்றுவது முரணானதாக இருக்கும். அத்தகைய சட்டத்தை மாநில அரசால் நிறைவேற்ற முடியாது.

    இரண்டாவதாக, இது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள உத்தரவுகளுக்கு முரணாகவும் அமையும்.

    மூன்றாவதாக இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களால் பிற விஷயங்களும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்று கவர்னர் கடிதத்தில் கூறியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×