என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இருதரப்பினர் மோதல்-வீடுகள் சூறை: பழவேற்காடு ஏரியில் ஆண்டிக்குப்பம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை
- பழவேற்காடு ஏரியில் அருகில் உள்ள ஆண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
- ஆண்டிக்குப்பம் கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் டி.எஸ்.பி. கிரியாசக்தி தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பொன்னேரி:
பழவேற்காடு ஏரியில் அருகில் உள்ள ஆண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். நான்கு குழுக்களாக பிரிந்து மீன்பிடித்து வந்த அவர்கள் பின்னர் இருதரப்பினராக பிரிந்து மீன்பிடித்து வந்தனர்.
இதற்கிடையே பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் இருதரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாமல் இருந்தது.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் ஒரு தரப்பினர் மீன்பிடிக்க அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கோர்ட்டு பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க செல்லலாம். அவர்களை யாரும் தடுக்க கூடாது என்று உத்தரவிட்டது.
இதனை செயல்படுத்தும் விதமாக ஆண்டிக்குப்பம் மீனவர்களிடம் கடந்த சில நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இருந்தது.
நேற்றுமுன்தினம் ஒரு தரப்பினர் மீன்பிடிக்க உரிமைகேட்டு குடும்பத்துடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி நடை பயணமாக செல்ல முயன்றனர். அவர்களை பழவேற்காடு பஜாரில் போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.
பின்னர் நேற்றுமாலை நடந்த சமாதான கூட்டத்தில் ஒரு தரப்பு மட்டுமே பங்கேற்றதால் இன்று மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை ஆண்டிக்குப்பம் கிராமத்தில் இருதரப்பு மீனவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டு அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
மேலும் வீடுகள், மற்றும் மோட்டார் சைக்கிள்களை நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் 4 பேர் படுகாம் அடைந்தனர். 2 வீடுகள் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தது. தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டிக்குப்பம் கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் டி.எஸ்.பி. கிரியாசக்தி தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மோதலை தவிர்க்க அவர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இந்த மோதல் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த மொத்தம் 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீசார் தேடுவதை அறிந்ததும் மீனவ கிராமத்தில இருந்த ஆண்கள் அனைவரும் படகுகளுடன் பழவேற்காடு ஏரிக்குள் சென்று விட்டனர்.
மோதல் ஏற்படும் நிலை நீடித்து வருவதால் அமைதி திரும்பும் வரை ஆண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இருதரப்பு மீனவர்களும் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை விதிப்பதாக சார்ஆட்சியர் ஐஸ்வர்யா உத்தரவிட்டு உள்ளார்.
இதற்கிடையே இன்று காலை போலீசார் ஒரு தலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக கூறி ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி-பழவேற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சார்ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் ஆண்டிக்குப்பம் கிராமத்தில் முகாமிட்டு பதட்டத்தை தணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
ஏற்கனவே பழவேற்காடு ஏரியில மீன்படிப்பது தொடர்பாக கூனங்குப்பம் மற்றும் மற்ற மீனவ கிராம மக்களிடையே பிரச்சினை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூனங்குப்பம் கிராமமக்கள் மீன்பிடிக்க அனுமதிக்க கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்தை நடத்தினர்.
இந்த நிலையில் ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக ஆண்டிக்குப்பம் மீன்வர்களிடையே மோதல் ஏற்பட்டு இருப்பது போலீசார் மற்றும் அதிகாரிகள் இடையே மீண்டும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
மோதலை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடித்து வருகிறது.






