search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 1000 இடங்களில் நாளை காய்ச்சல் சிறப்பு முகாம்கள்
    X

    தமிழகத்தில் 1000 இடங்களில் நாளை காய்ச்சல் சிறப்பு முகாம்கள்

    • டிசம்பர் இறுதி வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும்.
    • மொபைல் மருத்துவ குழுவினரும் கிராமப்பகுதிகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் மக்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தனியார் மருத்துவமனைகள், சிறிய கிளினிக்குகளில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.

    மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறையின் சார்பில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் காய்ச்சல் முகாம் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒன்றியத்திற்கு 3 முகாம்கள் வீதம் நடக்கின்றன. நகரப் பகுதிகள், கிராமப்பகுதிகளில் இதுவரை 4 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நாளை (சனிக்கிழமை) 5-வது வாரமாக முகாம்கள் நடக்கின்றன.

    இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    இதுவரையில் 4 வாரங்கள் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மொத்தம் 6260 முகாம்களில் மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 4 லட்சத்து 14 ஆயிரத்து 458 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    நாளை 1000 சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் மண்டலத்திற்கு 3 வீதம் 50 முகாம்கள் நடைபெறுகின்றன. காய்ச்சல் முகாம்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் இடம்பெறுவார்கள்.

    டிசம்பர் இறுதி வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். மொபைல் மருத்துவ குழுவினரும் கிராமப்பகுதிகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கிறார்கள். 3 பேருக்கு மேல் எந்த பகுதியில் காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும் அந்த இடங்களை கண்டறிந்து முகாம்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×