search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பால் விலையை உயர்த்தாவிட்டால் சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
    X

    பால் விலையை உயர்த்தாவிட்டால் சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

    • பால் உற்பத்தி செலவை கணக்கிடும்போது, இவ்விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான கொள்முதல் விலையாக இல்லை.
    • விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களை ஒன்று திரட்டி, சென்னை கோட்டையை நோக்கி மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்.

    நாமக்கல்:

    நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் விவசாயத்துடன், கால்நடை வளர்ப்பு உப தொழிலாக விவசாயிகள் செய்து வருகின்றனர். பால் உற்பத்தி மூலம், அவர்களின் அன்றாட செலவுக்கான, பொருளாதார தேவைகளை ஈட்டி வருகின்றனர்.

    தற்போது கால்நடை வளர்ப்பு என்பது மிகவும் லாபம் தரக் கூடியதாக இல்லாமல், கடினமான வேலையாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்வதற்கு மாட்டுத் தீவனம் விலை, வேலை ஆட்கள் கூலி பலமடங்கு உயர்ந்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மூலப்பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்களின் வாடகை பெருமளவு உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் பால் விலையை உயர்த்தி கொடுக்க கோரி ஏற்கனவே பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். ஒரு லிட்டருக்கு ரூ.3 மட்டும் கொள்முதல் விலை உயர்த்தி பசும்பால் லிட்டர் 1-க்கு ரூ.35-ம், எருமைப்பால் லிட்டர் 1-க்கு ரூ.44-ம் தமிழக அரசு அறிவித்தது.

    பால் உற்பத்தி செலவை கணக்கிடும்போது, இவ்விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான கொள்முதல் விலையாக இல்லை.

    பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட பேராட்டங்கள் நடத்தியும், தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையே நீடிக்கிறது.

    எனவே பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று, இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பசும்பால் மற்றும் எருமைப்பால் கொள்முதல் விலையை, லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தி அறிவிக்க வேண்டுகிறோம். அப்படி அறிவிக்காவிட்டால், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களை ஒன்று திரட்டி, சென்னை கோட்டையை நோக்கி மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×