search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேளாண் விளைபொருள் செஸ்வரி நீக்கம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு
    X

    வேளாண் விளைபொருள் செஸ்வரி நீக்கம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு

    • பலசரக்கு மளிகை நடத்திவரும் வணிகர்களுக்கும் மிகப்பெரும் பாதிப்பாக இருந்தது.
    • வெளியே விற்கப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு செஸ்வரி கட்டணம் கட்டவேண்டிய அவசியமில்லை.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் வேளாண் விளைபொருட்களுக்கு விற்பனை மையங்களில், அதாவது மார்க்கெட்டிங் கமிட்டிகளில் உள்ளே விற்கப்படும் விளைபொருட்களுக்கு செஸ்வரி விதிக்கும் நடைமுறை இருந்து வருகின்றது. ஆனால், அரசு அதிகாரிகள் மார்க்கெட்டிங் கமிட்டிக்கு வெளியிலும், வழிகளில் செல்லும் வாகனங்களிலும் ஆய்வு செய்து, சட்டத்திற்கு புறம்பாக செஸ்வரி விதித்து வந்தனர். இது பல்வேறு வகைகளில் வேளாண் விளைபொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் வணிகர்கள் மட்டுமல்லாது, பலசரக்கு மளிகை நடத்திவரும் வணிகர்களுக்கும் மிகப்பெரும் பாதிப்பாக இருந்தது.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை எண்.84/23-04-2022-ன் மூலம் செஸ்வரி விதிப்பு சம்பந்தமாக ஆணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அழுத்தம் கொடுத்து வந்தது. அதன் அடிப்படையில் 3-1-2023 அன்று அரசாணை எண்.1-ன் மூலம் அரசாணை எண்.84/23-4-2022 திரும்பப்பெறப்பட்டது.

    எனவே, மார்க்கெட்டிங் கமிட்டிக்கு வெளியே விற்கப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு செஸ்வரி கட்டணம் கட்டவேண்டிய அவசியமில்லை என்பதை, ஏற்கனவே அரசாணை எண்.84 ரத்து செய்யப்பட்டதன் மூலம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்திருப்பதற்கு பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தனது மகிழ்ச்சியையும், வரவேற்பையும் தெரிவித்துள்ளார். தமிழக வேளாண்துறை அரசு அதிகாரிகள், வேளாண் விளைபொருள் வணிகர்களுக்கு எவ்வித இடையூறும் தரக்கூடாது என மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×