என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஈரோட்டில் மழை வெள்ளம் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி பலி
    X

    ஈரோட்டில் மழை வெள்ளம் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி பலி

    • ரங்கம்மாள் தங்கியிருக்கும் ஓட்டு வீடு பெரும்பள்ளம் ஓடை பகுதி அருகே அமைந்துள்ளது.
    • தண்ணீரில் மூழ்கி மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அசோகபுரி பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள் (65). இவரது கணவர் கடந்த சில வருடங்கள் முன்பு இறந்து விட்டார். மூதாட்டி ரங்கம்மாள் மட்டும் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார். உறவினர்கள் சிலர் அவ்வப்போது ரங்கம்மாள் பாட்டியை பார்த்து வந்தனர்.

    ரங்கம்மாள் தங்கியிருக்கும் ஓட்டு வீடு பெரும்பள்ளம் ஓடை பகுதி அருகே அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இவரது வீடு அருகே தண்ணீர் செல்வது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணி முதல் 2.30 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பெரும்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நள்ளிரவு 1.30 மணி அளவில் ரங்கம்மாள் தங்கி இருந்த வீட்டுக்குள் மழை நீர் புகுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் ரங்கம்மாள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். மழைநீர் அவர் வீடு முழுவதும் சூழ்ந்ததால் ரங்கம்மாள் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இன்று காலை அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்ற போது ரங்கம்மாள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரங்கம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீரில் மூழ்கி மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×